ஹுஸைன் நானாவின் கோழிப் பண்ணை பற்றி யாரோ ‘சண்டியன்’ ஒருத்தன் முறைப்பாடு கொடுத்திருக்கின்றான்.
இந்த ஊருக்குள் ஹுஸைன் நானாவிற்குள்ள மரியாதைதான் என்ன?
ஸ்டேடஸ்தான் என்ன?
அவரை எப்படி சீண்டிப் பார்க்கலாம்?
சரி, ஹுஸைன் நானாவிற்கு என்ன பிரச்சினை?
எதற்கு இந்தளவு பில்ட் அப்?
யார் இந்த ஹுஸைன் நானா…?
இந்த மலையகக் கிராமத்தின் வேலைகளை “விழுந்து விழுந்து” செய்கின்ற, நால்வர் இந்தத் தெருவில்தான் வசிக்கிறார்கள்.
அவர்களில் இருவர்தான் ஹுஸைன் நானாவும், ரஸ்மி ஹாஜியாரும்.
ரஸ்மி ஹாஜியாரின் சகோதரியை ஹுஸைன் நானா திருமணம் செய்திருந்தார்.
அதனால், இருவருக்கும் உறவுமுறை மச்சானும் மச்சானும் என்றாகிறது.
தூரத்தில் இருந்து பார்த்தால், இவர்கள் இருவரும் உரத்த குரலில் பேசுவது கேட்கிறது.
இன்சாபும் கூட அங்கே நிற்கிறான்.
இன்சாப் ஹுஸைன் நானாவின் மூத்த மகன். ரஸ்மி ஹாஜியாரின் மற்றொரு மச்சானும் அங்கே நிற்கிறார்.
அதாவது ஹுஸைன் நானாவின் ‘சகலை’. இன்சாபின் சாச்சா.
உறவு முறைகள் புரிந்தனவா?
இனிக் கதையைத் தொடருங்கள்.
இந்த நால்வரும்தான் உச்சஸ்தொனியில் கதையாடல் செய்து கொண்டிருந்தார்கள்.
நேற்றிரவு பெய்திருந்த மழையால் மண் இன்னும் ஈரமாகவே இருந்தது.
அந்த மலையகக் கிராமத்தின் காலை நேரக் குளிர்மை எங்கும் பரவியிருந்தது.
அப்படியிருந்தும் இந்த நான்கு பேரும் பேசும் பேச்சின் உஷ்ணத்தை மட்டும் தெருவில் மிக நீண்ட தூரம் வரைக்கும் உணர முடியுமாக இருந்தது.
***
மழையுடன் கூடிய கால நிலை ஓரளவுக்குக் குறைவடைந்து, இயல்பு வாழ்க்கை திரும்புவதற்குள், ஊருக்குள் மற்றொரு பஸாத் துவங்கியிருக்கிறது.
சந்தியில் வைத்து நால்வரும் உரத்த குரலில் பேசியது ஹுஸைன் நானாவின் கோழிப் பண்ணைக்கு எதிராக யாரோ சண்டியன் ஒருவன் செய்திருந்த முறைப்பாடு பற்றியதான விஷயம்தான்.
ஹுஸைன் நானா லேசிப்பட்ட ஆளில்லை.
மலையகத்தின் கிராமங்களில் காற்சட்டை பொது வழக்கில் வராத எண்பதுகளில் கூட, சாரம் உடுத்திப் பழக்கப்படாத ‘நவீனத்துவ’ மனிதர்.
ஆறடி உயரம். அதற்கேற்ற பருமன்.
தற்போது காலத்தின் சுழற்சியில் உருவம் ஓரளவுக்குச் சோபை இழந்திருந்தாலும், சரத் குமாரைப் போன்ற எடுப்பான அவருடைய தோற்றம் இன்னும் மாறாமலேயே இருந்தது.
அவருடைய கல்வித் தகைமை எவருக்கும் தெரியா விட்டாலும், அவருடன் பேசுகின்ற சாதாரண மனிதர்கள் அவரை நன்கு படித்தவர் என்றே நினைத்தார்கள்.
அன்றாடம் பத்திரிகை படிப்பார். கம்பியூட்டரும், ஸ்மார்ட் போனும் வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே கூட உலக நடப்புக்களை நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
அனைத்துக்கும் மேலாக ரஸ்மி ஹாஜியாரின் மச்சான் என்பதே அவருக்குப் போதுமான தகுதியாக இருந்தது.
வீட்டோடு மாப்பிள்ளை என்றாலும், குடும்பத்திற்குள்ளும், ஊருக்குள்ளும் தனக்கென்று ஒரு ஸ்டேடஸைக் கசங்காமல் பேணி வந்தார்.
“பார்ம் தொறந்து அஞ்சி வருசமாவுது. இது வரைக்கும் ஒரு பிரச்சினை இல்ல. இவ்வளவு காலத்துக்குப் பொறவ் இதப் பத்தி கம்ப்ளய்ன்ட் கொடுக்குற என்டா வயித்தெறிச்சல்ல செஞ்ச வேல” ஹுஸைன் நானா சொன்னார்.
“ஓ …. ஓ …. இது எங்கட கௌரவப் பிரச்சின. எவனா இருந்தாலும் பரவாயில்ல. உடப்படா” பொதுவாகவே நிதானமாகப் பேசும் ரஸ்மி ஹாஜியார் பொங்கியெழுந்தார்.
“யாரு செஞ்சீக்குறன்டு தெரியுமா?”
“இங்கின துள்றதுக்கு ஈக்குற ஒரே ஆள் அஸாம்தான், சாச்சா. எங்கட சண்டியன்” என்றான் இன்சாப்.
“பார்முக்குப் பக்கத்துல ஈக்குற ஸுலைஹாவும், ஸஹ்ல் சேரும் கூட செஞ்சி ஈக்கேலும், அஸாம்ட மேல மட்டும் சந்தேகப்படவும் ஏலா” ரஸ்மி ஹாஜியார் இப்போது நிதானமாகப் பேசினார்.
“அதுகளுக்கு அந்தளவு முதுகுல பலம் இல்ல மச்சான்” இன்சாபின் சாச்சா சொன்னார்.
“ரெண்டும் பயந்தாங்கொள்ளிகள். இது அஸாம்ட வேலதான்”.
“அவனுக்குப் பாவம் பாக்கப்படா. கேம் ஒன்டு கொடுக்கணும்”. மற்ற மூன்று பேருமே இந்தக் கருத்தை ஆமோத்தார்கள்.
“எங்களோட முட்டிக்குறதுதான் இவனுக்கு வேல”
“பார்ம் ஸ்டார்ட் பன்ற நேரமே இவன் பிரச்சின பண்ணினே…”
பார்மை நடத்துவது ஹுஸைன் நானாவாக இருந்தாலும், அதற்கு முதலீடு செய்திருந்தது ரஸ்மி ஹாஜியார்தான் என்பது பரம ரகசியம்.
இன்சாப் படிப்பை முடித்து, வேலையில்லாமல் திரிந்து, தான் கசங்காமல் காப்பாற்றி வருகின்ற தன் இஸ்திரி நொருங்காத ஸ்டேடஸ் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காக, முன் யோசனையுடன் இன்சாப் ஏ-லெவல் செய்து கொண்டிருந்த போதே, இந்தப் பண்ணையைத் துவங்கி இருந்தார் ஹுஸைன் நானா.
“நாங்க குடுக்குற கேம், அஸாமுக்கு இனி இந்த மாதி தல தெரிச்ச வேலகள் செய்றதுக்கு நெனக்கப் படா, அந்தளவுக்கு ஈக்கணும்”.
“அதுக்கு மொதல்ல பார்ம பாதுகாக்கணும். சீல் வச்சுட முந்தி”
“ஒரு வேல செய்வோமா நாங்க?”
ஏதோ இரகசியம் பேசி விட்டு, அனைவரும் ஹுஸைன் நானாவின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
அடுத்த சில வினாடிகளில் தெரு அமைதியாகி விட்டது.
****
இந்தத் தெருவில் இந்த நான்கு பேரும் ஒரு முடிவை எடுப்பார்கள். பிறகுதான் மற்றவர்கள் கலந்துரையாடலுக்கே கூட அழைக்கப்படுவார்கள்.
இந்த நடைமுறைதான் கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது.
பொது முடிவென்று வருகின்ற போதே இந்த நிலை என்றால், இந்தக் கோழிப் பண்ணை விவகாரம் இவர்களின் தனிப்பட்ட விஷயம்; இதைப் பற்றி என்ன சொல்வது?
ரஸ்மி ஹாஜியார் இதற்கு முதலீடு செய்திருந்தார்.
ஹுஸைன் நானா மற்றும் அவருடைய மகன் இன்சாப் ஆகியோரின் பெயரில்தான் இது நடந்து கொண்டே இருந்தது.
ஏதோ ஒரு வகையில் இந்த மூவரின் உதவி இன்சாபின் சாச்சாவிற்கும் தேவை.
இந்த நிலையில், நால்வருமே தம் சொந்தப் பிரச்சினையாக இதனை எடுத்துக் கொண்டு பிரசார சூறாவளியை ஆரம்பித்தார்கள்.
தொலைபேசி, வட்ஸ்-அப், நேரடி சந்திப்புக்கள் என நேர்த்தியாக திட்டமிடப்பட்டதொரு பிரசாரம் அந்தத் தெருவில் அடுத்த சில தினங்களுக்கு இடம்பெற்று முடிந்தது. பெண்கள், சிறுபிள்ளைகள் கூட களம் இறக்கப்பட்டார்கள்.
தெருவில் இருக்கின்ற அனைவரும் சேர்ந்து, இந்தக் கோழிப் பண்ணை ஊருக்கு அவசியம்; இதனால் எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை; ஊரின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இப்படியான தொழில் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை வழங்குதுதான் திட்டம்.
இந்தக் கடிதத்தின் சட்ட ரீதியான விளைவுகள் என்னவாக இருந்தாலும், கதையின் வில்லன் ‘சண்டியன்’ அஸாமை உளவியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவதும், தண்டிப்பதுமே பெரிதும் இதன் நோக்கமாக இருந்தது என்பதை அனைவருமே ஊகிக்க முடியும்.
****
மஃரிப் தொழுகை முடிந்தது. மஃரிப் தொழுகைக்காக பள்ளியில் ஒன்று கூடியவர்கள் களைந்து சென்று கொண்டிருந்தார்கள்.
சுன்னத் தொழுது விட்டு, ஸஹ்ல் சேர் வெளியேரும் வரை இன்சாப் காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் ஸஹ்ல் சேர் வெளியேறினார்.
“அங்கள், அஸ்ஸலாமு அலைக்கும்”.
“வ’அலைக்குமுஸ்ஸலாம, இன்சாப். என்ன செய்தி? ஊர்லதான் போல தொடர்ந்து”
“ஓ அங்கள்... இந்த அஸாம் செஞ்ச வேலயால கொஞ்சம் கோசாவ ஆகிட்டல்ல”
“பார்ம் பிரச்சின இன்னம் முடியல்ல எல்லயா?…”
“இன்னம் இல்ல அங்கள். இங்கின எல்லாரும் பக்கத்துல பக்கத்துல வாழ்ற. எல்லாரும் சொந்தக்கார ஆக்கள். அதொன்டும் பாக்காம, அவன் பெய்த்துக் கம்ப்ளென்ட் கொடுத்து. அப்பிடி பிரச்சினையா ஈக்குறன்டா ஒங்களுக்கும், ஸுலைஹா தாதாக்கும் மொதல்ல பிரச்சனையா ஈக்கணுமே…” எடுத்த எடுப்பில் ஸஹ்ல் சேரை திக்குமுக்காடச் செய்தான் இன்சாப்.
அடுத்த சில மில்லி செக்கன்களுக்குள் ஸஹ்ல் சேருக்குப் பல விடயங்கள் ஞாபகத்தில் ஓடின. கோழிப் பண்ணையை மிக அண்மித்திருந்த வீடு ஸஹ்ல் சேருடையது. அடுத்த வீடு ஸுலைஹா தாத்தாவுடையது. இந்த மூன்று வீடுகள் தவிர, பார்மை மிக அண்மித்து அமைந்திருந்த மேலும் பல வீடுகள் இருந்தன. அந்த வீடுகளைத் தள்ளி அமைந்திருந்தது அஸாமின் வீடு.
கடந்த ஐந்து வருடத்தில் இந்தப் பண்ணை பெரிதும் சிரமங்களை ஸஹ்ல் சேருக்குத் தந்திருக்கிறது. இரவில் மட்டுமல்ல, பகலிலும் கூட நுளம்புத் தொல்லை தாங்க முடியவில்லை. ஈக்கள் தொல்லை அறுவெறுப்பூட்டுவதாக இருந்தது. நாற்றம் சொல்லும் தரமானதாக இல்லை.
ஆனால், ஹுஸைன் நானாவைப் பகைத்துக் கொள்வதற்கு ஸஹ்ல் சேர் ஒருபோதும் துணிந்ததில்லை. அதனால் மௌனம் காப்பதைத் தவிர, வேறெந்த விதத்திலும் அவர் தன் எதிர்ப்பைக் காட்டியதுமில்லை.
அஸாம் துணிந்து நடவடிக்கை எடுத்த போது, ஸஹ்ல் சேர் மனதுக்குள் சந்தோஷப்படவே செய்தார். ஆனால், அதனை வெளிப்படுத்தும் அளவுக்கு அவருக்குத் தைரியமிருக்கவில்லை.
தனக்கு ஏதாவது பிரச்சினை என்றால், தன் உதவிக்கு வந்து நிற்கும் அளவுக்குப் பலம் பொருந்தியவர்கள் இந்த நான்கு பேரும்தான்; அவர்களைப் பகைத்துக் கொள்வது அறிவீனம் என்று அவர் நினைத்தார்.
இன்சாபின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவர் தடுமாறினார்.
“ஓ…. ஓ…” என்று சொல்லி அவர் சமாளித்தார்.
இன்சாபின் கூர்மையான கண்கள் இந்தத் தடுமாற்றத்தை அவதானிக்கத் தவறவில்லை.
ஸஹ்ல் சேரின் வீடு வந்து விட்டது.
“வாங்களே.. இன்சாப் வீட்டுக்குப் போவோம்…” சம்பிரதாயபூர்வமாக ஸஹ்ல் சேர் இன்சாபை வரவேற்கவும், அந்த அருமையான வாய்ப்பை இன்சாப் பூரணமாக உபயோகப்படுத்திக்கொண்டான். இருவரும் ஸஹ்ல் சேரின் வீட்டு வராந்தாவிலிருந்த கதிரைகளில் அமர்ந்து கொண்டார்கள். பண்ணையில் இருந்து வருகின்ற நாற்றம் வயிற்றைப் புரட்டவே செய்தது.
“ரஸ்மி அங்கள், டடா, ஷரீக் சாச்சா எல்லாரும் பேசிக் கொண்டு ஈந்த. இந்த பார்ம் வந்து பிரச்சின இல்லண்டு ஊர்ல எல்லாரும் சேர்ந்து ஒரு கடிதம் கொடுப்போம் என்டு. ஊர் முன்னேர்ர என்டா இப்படியான தொழில்கள் டெவலப் ஆகணுமே. ஊர் டெவலப் ஆகுறதுக்கு இவன் ஒன்டும் செய்றதும் இல்ல. செய்ற ஆக்கள செய்ய உட்றதும் இல்ல”. அஸாமையே இன்சாப் குறிப்பிட்டான்.
“ஓ...” ஸஹ்ல் சேர் ஆமோதித்துத் தலையசைத்தார்.
பேச்சுக் குரல் கேட்டு, ஸுலைஹா தாதாவும் வெளிப்பட்டு வந்தார்.
பக்கத்து வீடுதானே?
சில செக்கன் இடைவெளிதான் இருந்தது இரண்டு வீட்டிற்கும்.
“இன்சாப் தம்பி, பாருங்களே, அஸாம் செஞ்சீக்குற மோசமான வேலய. நான் அஸாம்ட ஊட்டுக்குப் போனேன். அவன்ட உம்மாவும், தங்கச்சியும் ஒன்டுமே தெரியாத மாதி பேசுறாங்க”.
“அய்தான் ஸுலைஹா தாத்தா, குடும்பத்து ஆக்கள். ஓரே ஏரியால ஈக்குற. பக்கத்துல பக்கத்துல வீடுகள். அப்படி ஈந்தும் இப்பிடி நாய் வேல செய்யப்படாதே…”
“அய்தான் பாருங்களே, இன்சாப் தம்பி, ஒங்கட வாப்பா விஷயத்த சொன்ன நேரம், எனக்கு அழுகயே வந்துட்டு…”
******
மரங்களும், மனிதர்களும் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள்.
கடந்து போன தலைமுறைகளை ஞாபகம் செய்வது போல், பிரிட்டிஷ் கால புகையிரத நிலையங்கள் ஒன்று மாறி ஒன்று வந்து சென்று கொண்டிருந்ததன.
உட ரட மெனிக்கே மட்டும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து, மலையகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
உலகத்தை மெதுவாக இருள் போர்வை மூடிக் கொண்டிருந்தது.
கொழும்பு சென்ற அஸாம் புகையிரதத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான்.
ஊரில் நடந்த அனைத்து விடயங்களையும் அஸாமுக்கு தங்கச்சி வட்ஸ்-அப் செய்திருந்தாள்.
ஊர் மக்கள் அனைவரும் கோழிப் பண்ணைக்கு ஆதரவாக கடிதம் கொடுத்து விட்டார்களாம்.
“தங்கச்சி, யாரு, யாரு சைன் பன்னின”
“எல்லாரும்.. என்னயும் உம்மாவயும் தவிர”
“ஸஹ்ல் அங்கள்?”
“அவரும்தான்”
“ஸுலைஹா தாத்தா?”
“அவவும் தான். எல்லாருக்கும் மொத சைன் பண்ணினதே அவதான்”.
அஸாம் தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்ந்தான்.
இந்தப் பண்ணை ஏற்படுத்தி வந்த சுற்றுச் சூழல் பாதிப்பு என்பது அவனை மட்டும் பாதிப்பதல்ல; இது ஒரு பொதுப் பிரச்சினை.
இது பற்றி கோழிப் பண்ணை ஆரம்பித்தல் பற்றிய பேச்சு வந்ததில் இருந்தே அவன் குரல் எழுப்பி வந்தான்.
ஆனால், ஹுஸைன் நானா போன்றவர்களைப் பகைத்துக் கொண்டு, இந்த விடயத்தில் எவரும் அஸாமை ஆதரிக்க விரும்பவில்லை.
பேசுவதற்குத் தயாரில்லையென்றாலும், குறைந்தபட்சம் கையெழுத்திடாமலாவதாவது இருந்திருக்கலாம்.
ஸஹ்ல் சேர், ஸுலைஹா தாதா ஆகியோரைப் பற்றி என்ன சொல்வது?
அஸாமின் வீடு பார்மை விட்டும் சிறிது தள்ளியே இருந்தது. அஸாமை விடவும் மிகவும் கூடுதலாகப் பாதிக்கின்ற நிலையில் இருந்தவர்கள் அவர்கள்தான்.
அவர்களும் இது விடயத்தில் கையெழுத்திட்டிருந்தார்கள்.
இப்போது கூட சட்டரீதியாக, பண்ணைக்கெதிரான செயற்பாடுகளை முன் கொண்டு செல்வது சாத்தியமாகலாம்.
ஆனால், இது விடயத்தில் பேசுவதற்குரிய அவனுடைய தார்மீக உரிமை இப்போது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்விதம் தன்னை உளவியல் ரீதியில் தோல்வி அடையச் செய்வதே ‘அந்த நான்கு பேருக்கும்’ முக்கியமாக இருந்திருக்கிறது என்பதும் அஸாமுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.
அஸாமின் வாப்பா இஸ்ஸதீன் ஹாஜியார் உயிருடன் இருந்த வரை, ஊர் ஒரு கட்டுக்கோப்புக்குள் இருந்தது.
பணக்காரன், சண்டியன், அரசியல்வாதி, இயக்கவாதி யாராக இருந்தாலும், ஊரின் நலனுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற விடயத்தில் அவர் சிறிதும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை.
அது அவர் வசதியுடன் இருந்த காலத்தில் நடந்தது.
ஆனால், அவருடைய பொருளாதாரம் சரிந்ததோடு, அவர் சமூக அந்தஸ்த்தும் சேர்ந்தே சரிந்து விட்டது.
அஸாம் வளர்ந்து வந்த போது, அந்த சமூக அந்தஸ்த்தில் எதுவும் அவனுக்குப் பரம்பரை சொத்தாக எஞ்சியிருக்கவில்லை.
கொழும்பில் தலைமையகத்தைக் கொண்ட சமூக அமைப்புக்களின் சமூக ஆர்வலர்கள் சிலர் கிராமத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கொழும்பில் கொடுக்கும் வேலைகளை செய்வதுடன் அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் தைரியம் அவர்களுக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.
முகத்திற்கு முன் முகஸ்துதி செய்வது, முதுகுக்குப் பின் திட்டித் தீர்ப்பது என்பதுதான் ஊரில் பெரும்பாலனவர்களின் கொள்கையாக இருந்திருக்கிறது.
அசாமை விட, ஏணி வைத்தாலும் எட்டாத வகையில், பணம், செல்வாக்கு, அதிகாரம் என உயர் நிலையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் இது விடயத்தில் மௌனம் சாதிக்க, சாதாரண நிலையில் இருக்கின்ற தான், தன் சக்திக்குட்பட்ட வகையில், சட்டத்தின் எல்லைக்குள் நின்று இது விடயத்தில் தன் கடமையை நிறைவு செய்திருக்கும் ஆத்ம திருப்தியை அசாம் உணர்ந்தான்.
அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவும் செய்தான்.
"என் கடமையைச் செய்து விட்டேன். இனிப் பொறுப்பில் உள்ளவர்கள்தான் இறைவனின் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்" என்று அவன் மனம் அமைதி கொண்டது.
தெளிந்த நீர் ஓடை போல், தோல்வியிலும் தன் மனம் தூய்மை பெற்றிருப்பதை அசாம் உணர்ந்தான்.
(யாவும் கற்பனை)
ரிஸா ஜவ்பர்
அக்குறணை - கண்டி
இலங்கை