சஞ்சிகையொன்று நடத்த வேண்டும் என்ற சிறுவயதுக் கனவு பலருக்கும் இருப்பதுண்டு. அந்தக் கனவு என்னைப் பொறுத்த வரை தூரிகை ஊடாக நிறைவேறி விட்டதாகவே நினைக்கின்றேன். நான்கு இதழ்களுடன் மாத்திரம் இந்த சஞ்சிகை நின்று போய் இருந்தாலும், அந்த சஞ்சிகையை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சி விட்டுச் சென்ற அனுபவம் சாமான்யமானதாக இல்லை.
அச்சு வடிவத்தில் என்றாலும் சரி, மின் சஞ்சிகை வடிவத்தில் என்றாலும் சரி, சஞ்சிகை ஒன்றை வெளிக் கொணர்வது மிகவும் சிரமமானது.
அதுவும் இல்லாமல், தூரிகையைப் பொறுத்த வரை, அதற்கென்று “தூரிகைக் குழுவினர்” என்று சொல்லும் படியான எந்தக் குழுவும் இருந்ததில்லை. என் மனைவியைத் தவிர வேறு எவரும் இந்த முயற்சியில் தோளொடு தோள் நின்றவர்கள் என்று சொல்வதற்கும் எவரும் இல்லை.
அந்த வகையில், இது ஒரு தனிநபர் முயற்சிாக மட்டுமே இருந்தது.
இந்த நிலையில், தூரிகை நிலைத்து நிற்றல் என்பது ஒரு வாழ்நாள் தியாகத்தை வேண்டி நின்றது என்பதை மறுதலிக்க முடியவில்லை.
வணிக வெற்றியைப் பெறுவது என்பதும் தூரிகை போன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு சஞ்சிகையால் சாத்தியமா என்பதும் சந்தேகமே...!
இருப்பினும், சஞ்சிகையின் மின்பிரதிகள் பல நூற்றுக்கணக்கணக்கானவர்களை சென்றடைந்ததன.
இந்தத் தொகை ஆயிரக்கணக்கானவர்கள் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தியக்காக இருக்காது என்றே நினைக்கின்றேன்.
நாட்டின் பல்வேறு திக்குகளில் வாழ்பவர்களும் இதற்கு நல்ல ஆதரவை வழங்கினார்கள்.
எப்படியோ நான்கு இதழ்கள் வெளிவந்தன. நான்காவது இதழ், மின் சஞ்சிகையாக மட்டும் வெளிவந்தது.
அடுத்த வந்த நாட்கள் வேலைப்பளு நிறைந்ததாக இருந்தன. தொழில் மற்றும் கல்வி ரீதியான அதிக சுமையான நாட்களாக இந்த நாட்கள் இருந்தன.
இந்த நாட்களில்தான் பிள்ளைப்பாக்கியத்தையும்
அல்லாஹ் எமக்கு அருளினான்.
மீண்டும் தூரிகையை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த முயற்சி கோவிட் 19 போன்ற பல்வேறு காரணங்களால் தடைப்பட்டே போய்க் கொண்டிருந்தது.
இந்த 2024, ஜனவரி, 16 உடன் தூரிகை முதல் இதழ் வெளியீடு செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
தூரிகை தயார்செய்யப்பட்ட போது, யார் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது என்ற மிகுந்த கவனத்துடன்தான் தயாரித்தேன்.
அந்த சிரத்தையையும் தாண்டி, எவர் மனதையாவது புண்படுத்தும் வகையில் அது வெளிவந்திருந்தால், அதற்காக இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
தூரிகை நின்று போனது என்பது பெரிதும் கவலை தந்த விடயம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இப்போது திருப்பிப் பார்க்கும் போது, அந்த முயற்சி பிரம்மிப்புத் தருவதாகவும், ஆத்ம திருப்தியைத் தருவதாகவுமே இருக்கிறது.
ஓவ்வொரு தீமைக்குப் பின்னும் கண்களுக்குப் புலப்படாத எம் அறிவுக்கு எட்டாத நலவுகள் இருக்கலாம். தூரிகை நின்று போனதன் பின்னாலும் அத்தகைய நலவுகள் இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே அதனை அறிவான்.
இப்போது ஆங்கிலத்தில் எழுதி நிறைவு செய்துள்ள “the Sri Lankan profession” என்ற நாவலின் ஆரம்ப சில பகுதிகளை உண்மையில் தூரிகையில் “உத்தியோகம்” என்ற பெயரில் தொடர்கதையாக எழுத ஆரம்பித்திருந்தேன்.
நின்று போன அந்த தொடர்கதையைத்தான் கொரனா லொக்-டவுன் காலத்தில் ஆங்கிலத்தில் விரிவான நாவலாக எழுத ஆரம்பித்தேன்.
(03) நேர்காணல்கள்
01. "எழுத்து எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது",