Tuesday, 24 March 2020

ட்ரெஸ்ஸிங் சென்சும், பெமிலி சென்சும் (சிறுகதை)

அன்று ஞாயிற்றுக் கிழமை.

அழகிய கண்டி நகருக்கு விடுமுறை.

ஆனால், கல்வித் துறைக்கு ஞாயிறு தினம் கூட விடுமுறையில்லை. அது மலையகத்தின் பட்டி, தொட்டிகளில் இருந்து மாணவர் கூட்டம் கண்டி நகருக்கு படையெடுத்து, நகரை ஆக்கிரமிக்கின்ற நாள்.

கண்டி வாவி.

கண்டி நகரின் இதயத்திற்கு அழகு சேர்க்கும் அலங்காரங்களுள் ஒன்று.

கண்டிய மன்னர்கள் காலத்தில் அழகுக்காக மட்டுமன்றி, பாதுகாப்பு அரணாகவும் கூட அதனை அமைத்திருக்கிறார்கள்.

இப்போது அது கண்டிக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது.

மாளிகா ஹோல்டில் இறங்கிய ரிப்காவிற்கு, வாவியை சுற்றி நடப்பது உடலுக்குத் தெம்பாக இருக்கும் போல் தோன்றியது. வாவி அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும், சிறிய சிறிய அலைகள் அவ்வப்போது ஆங்காங்கே எழுந்த வண்ணமே இருந்தன. இதமான குளிர்ந்த காற்றை சுமந்து வந்து, ரிப்காவிற்கு அணிவித்தன.

நேரம் ஏழறைக்கும் எட்டு மணிக்கும் இடையில் இருக்கலாம்.

வாவிக் கரையில் சுதந்திரமாக காற்று வாங்கலாம் போல் தெரிந்தது. பெரிதாக வாவிக் கரையில் ஜனநடமாட்டம் இல்லை. களைத்திருந்த ரிப்காவின் உடலுக்கும், மனதுக்கும் அந்த வாவிக் காற்று இதம் தந்தது.

கைத்தொலைபேசி சிணுங்கியது.

“எங்க டீ ஈக்குறாய்….?” நண்பி சிதாராவின் குரல்.
    
          
“வெவக்கி கிட்ட நிக்குறேன். நீ எங்க?”

“மாளிகாவ ஹோல்ட்ல எறங்கி ஈக்குறேன்”.

“அப்பிடியா… நில்லு வாரேன். காத்து வாங்குவோம் என்டு சும்மா நடந்து வந்தேன்”.

“வர வர ஒனக்கு தைரியம் கூடத்தான்”.

ரிப்காவும், சிதாராவும் சேர்ந்து கொண்டார்கள்.

நண்பிகள் இருவரும் கண்டி நகரில் பீ.ஏ பரீட்சை தயாரிப்பிற்கான வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு வந்திருக்கிறார்கள்.

“என்னடி, இப்ப தனியா காத்து வாங்கவெல்லாம் போறாய்…. கல்யாணம் எல்லாம் செட் ஆகிட்டோ….”

“செட்டாயிட்டாலும்….. டயடா இருந்தது. அதான் கொஞ்சம் காத்து வாங்கினா நல்லா இருக்குமே என்டு….”

“இருந்தாலும் ஒரு வயசு பெண் தனியா நடக்குறா என்டா….!”

“கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியா….?”

“சரிம்மா, வாய பொத்திக்குறம். என்னடா பொண் பாத்துட்டு போன செய்தி சக்ஸஸோ என்டு ஒரு அக்கறைல கேட்டேன். இந்தக் காலத்துல ஒரு ப்ரண்டுக்காக க்யா பண்றது கூட ஒரு தவறு போல….”

‘வை தில் கொல வெறி… கொல வெறி… கொல வெறி டீ ’ சிதாரா மெதுவான குரலில் பாடத் துவங்கினாள்.

“யா அல்லாஹ்” ரிப்கா காதுகளை மூடிக் கொண்டாள். “நானே ஏகப்பட்ட கடுப்புல ஈக்குறேன். தேவையே இல்லாம, காலையோட கடுப்பேத்துற….”

“ம்ம்… அப்படி வா வழிக்கு. மெடம் அப்படி கடுப்பா ஈக்குறத்துக்கு காரணம் என்ன என்டுதான் கேக்குறேன்”.

“புதிசா என்ன காரணம். பிடிக்கல்லயாம். ஏழான்டு சொல்லிட்டாங்க. ஏன்ட கஷ்டம் ஒருத்தருக்கும் வெளங்காது…”

“ஹலோ…. ஹலோ…. சும்மா கலாய்க்கணும்னு கலாய்ச்சா…. சீரியஸாகிட்டாய்… இப்ப என்ன பிரச்சினயாம்”

“புதிசா என்ன ரீஸன். கலர் போதாதாம்…வெள்ள பொண்தான் வேண்டுமாம்”

”ம்ம்…. ஒனக்கு கலர் போதா என்டா உலகத்துல முக்காவாசிப் பேர் வாழாவெட்டியாத்தான் இருக்கணும்”. சிதாரா யோசிப்பது போல பாவணை செய்தாள்.

சிதாரா தொடர்ந்தாள்:

“ரிப்கா இங்க பாரு. சீரியஸாத்தான் சொல்றேன். இந்தக் காலத்துல பொடியன்மார் ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் கூடுதலா பாக்குறாங்க. புல் மேக்-அப்ல ஹிந்தி ஹீரோயின் மாதிரி வைப் இருக்கணும் என்டு எதிர்பார்க்குறாங்க. என்ன பண்ண வேண்டியது?? நாங்களும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான்”

“அப்ப எங்களுக்கு ஒரு சுதந்திரமே இல்லயா…? எங்க ட்ரஸ்ஸிங்க் எப்படி இருக்கணும் என்டு எங்களுக்கு டிசைட் பண்ண ஏலாதா? அட்ஜஸ்ட்மன்ட் எல்லாம் என்னால செய்ய ஏலாது. நான் ஒரு இலட்சியத்தோட வாழ்றேன்”.

“கல்யாணம் வரக்கும் தானே… அதுக்கு பொறவ் வெளிய என்ன சண்டியன் என்டாலும், எங்கள்ட அடக்கித்தானே வாசிக்கணும்”

“சரி. அப்பிடி என்ன அட்ஜஸ்மன்ட் செய்யணும்….??”

“அப்பிடி எக்ஸ்பேர்ட கேளு. நல்ல பேஷல் க்றீம் போட்டு முகத்த அழகாக்கு. மேக்கப் இல்லாம வீட்டுக்கு வெளிய வரவே கூடாது. முக்கியமா இந்த ட்ரெஸ்ஸிங்க்ல சின்ன சின்ன சேஞ்சஸ். முக்கியமா நீ சுத்துரது ஷோலா? இல்லாட்டி சாரியா? சின்ன ஷோல் ஒன்டு இருந்தா போதும். அதோட ஒன்ட பேஷல் எக்ஸ்ப்ரஷனும் அட்றக்டிவ்வா இல்ல. அதுக்கு சின்ன ட்ரெய்னிங்க் தேவை”.

“போடி…. நீயும் ஓன்ட ஐடியாவும்…”

இருவரும் டியூடரியை அடைந்தார்கள்.

இந்த அழகிய கண்டி நகரில், இப்படி ஒரு பாழடைந்து, இருளடைந்து போன, காலம் காலமாக சுத்தம் செய்யவோ, பூச்சடிக்கப்படவோ இல்லாமல், இப்படியான கட்டிடமொன்று இருக்க முடியுமா என்று நீங்கள் ஆச்சர்யப்பட முடியும்.

அந்த மண்டத்தின் இரண்டாவது சுவர்ப்பக்க மூளையில் இரண்டாவது வரியில் ரிப்கா அமர்ந்திருந்தாள். அவள் கவனம் பாடத்தில் லயிக்கவில்லை. சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. வரும் வழியில் சிதாரா சொன்ன விடயங்களில் ஏதாவது உண்மை இருக்கக் கூடுமா?

இல்லை. தனக்கு என்று அல்லாஹ் ஏற்படுத்திய ஒருவன் இருக்கவே செய்கின்றான். அதற்கு நியமிக்கப்பட்ட நேரம் இருக்கவே இருக்கிறது. அது வரை பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. அப்படி இல்லாமல் அவசரப்பட்டு, சோர்வடைந்து விடுவதில் என்ன பிரயோசம் இருக்கிறது?

தவிரவும், அவளுக்கு அழகும், இயல்பும் அவள் இயல்பான நிறம்தான். அவளுடைய ஆடை முறை என்பது அவள் சுதந்திரம், ஆளுமை. கல்யாண சந்தைக்காக அதை அவள் மாற்ற முடியாது. அப்படி மாற்றினால், காலம் முழுதும் அவள் நடிக்க வேண்டியிருக்கும். கல்யாணத்தின் பிறகு தன் சுய ஆளுமையைத் தொலைத்து விடுகின்ற பல்லாயிரக் கணக்கான பெண்களின் பட்டியலில் அவளும் ஒருத்தியாகி விடுவாள்.

உள்ளம் தெளிந்தவள் பாடத்தில் கவனம் செலுத்த துவங்கினாள். கண்டியின் காலை நேரக் குளிரைப் போலவே அவள் உள்ளமும் குளிர்ந்திருந்தது.

*******

காலை நேரம் குளிராக இருந்தால் என்ன? நேரம் பகலை நெருங்க, நெருங்க உஷ்ணம் கூடிக்கொண்டு சென்றது.

உஷ்ணம் கூடுதலாக இருக்கும் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் வேண்டுமென்றால், இது டிசம்பர் மாத வெயில் போல இதமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

உஷ்ணம் வெளியில் அதிகமாக இருப்பது போதாதென்று, கூரை மிகவும் தாழ்வாக இருந்தது. வெயில் உஷ்ணத்தை பன்மடங்கு அதிகமாக்கி, வகுப்பிற்குள் அந்தத் தகரக் கூறை கடத்தியது.

பல நூறு மாணவர்கள் வெளிச்சுவாசிக்கும் காபனீரொட்சைட்டு, அந்த மண்டபத்திற்குள் அடங்கி, மூச்சைத் திணரச் செய்தது.

காலையில் இரண்டு சம்சாக்களை சாப்பிட்டது மட்டும்தான். பகல் இரண்டு பிடி சோற்றுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எங்கே பகல் சாப்பாட்டை சிதார சரியா எடுக்க விட்டாள்? திரும்பவும் அதே பல்லவிதான்.

இப்போது பசியும், உஷ்ணமும் சேர்ந்து தலை வழியை வேறு உண்டு பண்ணி விட்டது.

வகுப்பு நிறைவடைந்து விட்டது.

கூட்டம் களைந்தது. ஒட்சிசனைத் தேடி அந்த ஒடுங்கிய மண்டபத்தில் இருந்து, மாணவர்கள் வெளியே வந்தார்கள். திருவிழா முடிய கூட்டம் களைந்து செல்வது போல், இறைச்சலுடன் கூட்டம் களைந்து சென்றது.

ரிப்கா மீண்டும் சிதாராவிடம் மாட்டிக் கொண்டாள். காலையில் சிதாரா அவள் ஆன்டி ஒருவரின் வீட்டில் இருந்து வந்ததால், இருவரும் சேர்ந்து வருகின்ற தேவை உருவாகவில்லை. ஆனால், பஸ் நிறுத்தத்தில் இருந்து, டியூட்டரி வரையான அந்த ஐந்து நிமிட தூரத்தில் அவள் பட வேண்டியிருந்த பாடு, சுப்ஹானல்லாஹ்..!

ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் இல்லையாம். இந்தக் காலப் பொடியன்மார் ஹீரோயின் மாதிரித்தான் பெண் தேட்றாங்களாம்… அட்ஜஸ்ட் பண்ணல்லன்னா வாழ ஏலாவாம். யார் அவளிடம் இதையெல்லாம் கேட்டார்கள்? நான் வாழாவெட்டியாக இருந்தால் இவளுக்கு என்ன? லண்டன் மாப்பிள்ளை என்ற திமிர் இப்பவே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

ரிப்காவிற்கு ஆத்திரம் ஆதிதிரமாய் வந்தது. தனிப்பட்ட இது மாதிரியான விடயங்களை ரிப்காவிடன் பகிர்ந்து கொள்வதில்லை என்றுதான் நினைக்கின்றாள். ஹனா, இஷ்ரா போன்றவர்களே ரிப்காவின் நெருங்கிய நண்பிகள்.

சிதாராவைப் பொறுத்த வரை, அவளுக்கு நண்பிகள் அதிகம். அவர்கள் மத்தியில் அவளுக்கு பொபியூலரிட்டியும் அதிகம். சிதாராவுடன் அதிகம் ஒட்டிகொள்வதில்லை என்ற கொள்கையைத்தான் ரிப்கா நீண்ட நாட்களாக கையாண்டு வந்தாள். ஆனாலும், என்ன? சிதாரா சில வீடுகள் தள்ளி வசிக்கிறாள். நெருங்கின சொந்தம் வேறு. கிளாஸ் போவதென்றால், தனியே போக வேண்டியதில்லை. சிதாரா வீட்டு வேன் செல்கின்ற போது, கூடவே போய் இறங்கிக் கொள்ளலாம். போக்குவரத்தும் கஷ்டமில்லை. பாதுகாப்பும் வேறு.

ஆரம்பித்தில் இருந்தே இந்த ஏற்பாடு ரிப்காவிற்குப் பிடிக்கவில்லை. ஸ்கூல் காலத்தில் அவள் படுத்திய பாடு, கொஞ்ச, நஞ்சமா….!

நல்ல வேளையாக ஏ-லெவல் செய்வதற்கு சிதாரா வேறு ஸ்கூல் மாறிப் போய் விட்டாள். ரிப்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது போலிருந்தது.

“டடா, நீங்க வாரா?” சிதாரா கைத்தொலைபேசியில் கேட்டாள்.

“இன்னும் ஐந்து நிமிஷத்தில் வந்துடுவாவாம்”. ரிப்காவைப் போலவே, சிதாராவும் நன்கு களைத்திருந்தாள்.

இருவரும் வேனில் ஏறுவதற்கு பஸ் நிறுத்தம் வரை வந்து விடுவது வழக்கம். இங்கு கூட்டம் அதிகம். ஒரு வித பாதுகாப்பு உணர்வு. ஏதாவது அபாயம் என்றால், உதவிக்குப் பலர் வருவார்கள் என்ற நம்பிக்கை. டியூட்டரி முன்னால் அப்படியல்ல. மாணவர் கூட்டம் சென்று முடிந்து விட்டால், சந்து போன்ற அந்த இடம் சன சூன்யமாகி விடும். ஏதாவது அபாயம் நேர்ந்தாலும், மற்றவர்களை உதவிக்கு அழைப்பது கடினம்.

அதுவும் இல்லாம், அந்த இடம் வன்வேயில் இருந்தது. அந்த இடத்திற்கு வேனில் சிதாராவின் வாப்பா வருவதாக இருந்தால், சுற்றிக் கொண்டு வர வேண்டும். வாகன நெரிசலில் அதற்கு அதிக நேரமாகும். அதனால்தான் பஸ் நிறுத்தம் வரைக்கும் இருவரும் வந்து விடுவார்கள். சிதாராவின் வீட்டு வேன் அவர்களை பஸ் ஸ்டான்டில் வைத்து ஏற்றிக் கொள்ளும்.

பஸ் நிறுத்தம் கடும் கூட்டமாக இருந்தது. கண்டி நகரின் சந்து பொந்துகளில் இருந்தெல்லாம், நானாவித வகுப்புக்கள் முடிந்து, மாணவர்கள் கோழிக் கூட்டை திறந்து விட்டது போல வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

நாட்டின் புதிய தலைமுறையால் அந்த ஞாயிறு தினத்திலும் பேருந்துக்கள் நிரம்பி வழிந்தன.

வேனில் வராமல் ஒவ்வொரு வார இறுதியிலும், பஸ்ஸில் பயணிப்பது என்றால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? சிதாரா மீது இருந்த கோபம் மாறி, ஒரு வித நன்றியுணர்வுதான் இப்போது மிகைத்திருந்தது.

இப்போதுதான் தன் சுற்று வட்டாரத்தை சரிவர ரிப்கா கவனித்தாள். சுற்றி வர நின்ற இளைஞர் கூட்டத்தில் சிலர் சிதாராவை கண் இமை ஒட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிலர் ரிப்காவையும் கூட பார்த்தார்கள்தான். அவர்களில் ஏ-லெவல் செய்கின்ற, இவர்கள் இருவரையும் விட வயதில் குறைந்தவர்களாகக் கூட இருக்கலாம். அவர்களிடம் எல்லாம் போய், நான் உங்கள் அக்கா வயதில் உள்ளவள் என்று சொல்லவா முடியும்?

வேன் அவசரமாக வந்து விடாதா என்று ரிப்கா நினைத்தாள். ஆனால், அந்த வாகன நெரிசலில் ஐந்து நிமிடத்தில் வாகனம் வந்து சேர்வதற்குரிய சாத்தியப்பாடு தென்படவில்லை.

“என்ட என்ட…. சீட் தியனவா…” கண்டக்டர்மார் ஊர் பெயர்களைச் சொல்லிக் கூவியழைத்தார்கள்.

“ஒன்ன பாக்குறாங்க டீ”

“ஒன்ன பாக்கல்லன்டு கவலயா?”

“…..”

எத கேட்டாலும், எடக்கு, முடக்காக சீரியஸ்னஸை இல்லாமலாக்கி விடுகிறாள்.

“நீயும் சின்ன, சின்ன சேன்ஜஸ் செஞ்சி பாரு. ஒன் பின்னாலயும் எத்துன பேரு வாரங்கன்னு”

“சின்ன ஷோல் …. பேஷல் கிறீம்ஸ் …. பேஷல் எக்ஸ்பிரஷன் ….”

“எக்ஸலன்ட் …. யூ கொட் இட்”

“எல்லா போய்ஸும் ரோட்ல ட்ரெஸ்ஸிங்க் சென்ஸோட போற கேர்ள்ஸ் தேடுற இல்ல. பாம்பே ஹீரோயின் மாதிரி இருக்கணும் என்டு எதிர்பார்குறதும் இல்ல. வீட்ல பெமிலி சென்ஸோட நடக்குற கேர்ள்ஸ் வேண்டும் என்டு தேட்ற போய்ஸ் நிறையப் பேர் ஈர்க்குறாங்க...."

பட்டென்று மிக மெல்லிய ஒரு மாற்றம் சிதாராவின் முகத்தில் ஏற்படுவதை ரிப்கா கவனித்தாள். சில செக்கன் நேர மாற்றம். அது கூட இல்லை. சில மில்லி செக்கன்கள். மீண்டும் அதே குறுநகை சிதாரா முகத்தில் ஆடத்துவங்கியது.

“என்னம்மா… எங்களப் பாத்தா பெமிலி சென்ஸ் இல்லாத மாதிரியா இருக்குது…?”

இன்னும் ஏதோ சொன்னாள். இப்போது அந்த வார்த்தைகள் ரிப்காவைப் பாதிக்கவில்லை. அதற்குள் வேன் வந்து விட்டது.

இருவரையும் சுமந்து வேன் ஊரை நோக்கி பயணிக்க துவங்கியது.

(யாவும் கற்பனை)

ரிஸா ஜவ்பர்
அக்குறணை - கண்டி,
இலங்கை

(செப்டம்பர், 2018)