Friday, 27 March 2020

சிறுகதை : நூற்றாண்டு விழா


“மச்சான், புரோக்ராம்ல நல்லா பேசுவாய்தானேடா..?”.

“மச்சான், இவன் மாற ஆள்டா. ஸ்டேஜ்ல பேசியே எல்லாரயும் மடக்குவான் போல..!”.

நண்பர்களின் உட்சாகமூட்டல்கள், கிண்டல்கள் ...
"ருஹைம், ஸ்பீச் ரெடியா?" பஷீரா டீச்சர் கேட்டார்.

“ஓ டீச்சர்,....”

“நெறயப் பேர் அந்தக் கூட்டத்துல பேசணும் என்டு ஆசப்பட்றாங்க. அதனால ஒரு ரிஹர்ஸல் இருக்குது. எட்டு அறக்கி மாதி அஸ்ஸம்ப்லி ஹோலுக்கு வாங்க”.

கல்லூயின் நூற்றாண்டு விழா இன்னும் சில நாட்களில் இடம்பெற இருந்தது. நூற்றாண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் மாணவர்கள் சார்பாக ‘பிராந்தியக் கல்வியில் நமது பாடசாலையின் பங்கு’ என்ற தலைப்பில் ருஹைம் பேச வேண்டியிருந்தது.

பிரதமரில் இருந்து, வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஓரிருவர் உள்ளடங்கலாக, பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொள்ள இருந்தனர்.
    
        
இக்கூட்டத்தில் பேசும் வாய்ப்புக் கிடைப்பதையிட்டு ருஹைமுக்கு மனம் நிறைந்த சந்தோஷம்.

முன்பெல்லாம் இப்படி வாய்ப்புக் கிடைப்பது மிக அரிது. போட்டிகள் என்று வந்த போதிலும், ஆசியர் தரப்பில் எந்தப் பயிற்றுவித்தல் கிடைப்பதோ, வாய்ப்புக் கிடைப்பதோ இல்லை.

ஏற்கனவே அறிமுகமானவர்களை மட்டும் போட்டிகளுக்கு அனுப்பி, தமது கடமை முடிந்தது என்று பொறுப்பாசிரியர்கள் பெருமூச்சு விட்டமையால், ஒரு சிலர்தான் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டார்கள்.

முன்பெல்லாம் போட்டிகள் என்று வருகின்ற போது, அவன் விரும்பிய போதிலும் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது மிக அரிது.

இம்முறை இடம்பெற்ற இல்ல ரீதியான மீலாத் போட்டிகளுக்குப் பிறகுதான், அவனுக்கு உரிய அறிமுகம் ஸ்கூலில் கிடைத்தது. அப்படிக் கிடைத்ததும் சிலருக்குப் பொறாமைதான்.

ஆசிரியர்களில் சிலர் கூட ருஹைம் நூற்றாண்டு விழாவில் பேசுவதை விரும்பவில்லை.

புதிதாக வந்திருந்த நஜ்முதீன் சேரின் சர்வதிகார நிர்வாகம் மட்டும் இல்லையென்றால், ருஹைமிற்கு அந்த வாய்ப்பும் வாய்த்திருக்காது.

எவ்வாறாயினும், ஏற்கனவே ருஹைம்தான் நூற்றாண்டு விழாவில் பேசுவான் என்பது முடிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டொரு நாட்களில் இடம்பெற இருக்கின்ற நூற்றாண்டு விழாவில் பேசப் போகின்றோம் என்ற நினைவு ருஹைமிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.

எத்தனையோ ஆண்டு கால பாடசாலை வாழ்க்கையில் முதல் முறையாக அவனுக்கு மறுக்கப்படிருந்த வாய்ப்பு இம்முறை கிடைத்திருக்கிறது.

*****

பைனஸ் மரங்களின் அசைவு உடலை மென்மையாக வருடிச் செல்லும் இதமான காலைப் பொழுது.

பாடசாலை ஆரம்பித்து சில நிமிடங்களே ஆகியிருந்தன. ஒரு நாள் ஆரம்பிக்கும் உட்சாகத்திலோ அல்லது அர்த்த ராத்திரி தாண்டுகின்ற வரை கம்ப்யூட்டர் முன்னாள் தவமிருந்த மாணவர்கள் இன்னும் முழுமையாக தூக்கம் விழிக்கவில்லை என்பதனாலோ, பாடசாலை ஆயிரக் கணக்கான மாணவர்கள் இருந்த போதிலும் மௌன ராகம் இசைத்தது.

பத்து டீ வகுப்பு அந்த பழங்கால மண்டபத்தின் வலது தொங்கலில் அமைந்திருந்தது. இடைவேளை வரை இங்கு கற்பது இன்பமானது.

இடைவேளைக்குப் பிறகு சிறுநீர் கழிக்க வருகின்ற பொடியன்கள் கதவும், தண்ணீர் வசதியு இல்லாத மலசலகூடங்களில் சிறுநீர் கழித்து விட்டுப் போவார்கள்.

இனி அந்த நாள் முடிகின்ற வரை சிறுநீர் வாசம் காற்றில் கலந்து வரும்.

அந்த வாசத்தைச் சுவாசித்துச் சுவாசித்து, பத்து டீ பொடியன்மாருக்கு அது இசைவாக்கமடைந்து விட்டது.

பணத்தைத் தண்ணீராகக் கரைக்கின்ற சோனக சனங்களின் பாடசாலை இப்படி இருப்பதைப் பற்றி, சித்திலெப்பை மட்டும் உயிரோடு இருந்திருந்தால், என்ன நினைத்திருப்பாரோ?

ராஸியா டீச்சரின் தமிழ்ப்பாடம்.

பொடியன்பார் ஹோம் வோர்க் செய்து கொண்டு வராததால், காலையோடே வழமைபோல் மகாபாரத யுத்தம் துவங்கி விட்டது. “மாடுகள், எரும மாடுகள். புள்ளகளா இதுகள்? எரும மாடுகள்”.

பொறுமைதாண்டி, தான் ஒரு ஆசிரியர் என்பதையும் மறந்து ஏசிக் கொண்டிருந்தார் ராஸியா டீச்சர்.

ராஸியா டீச்சரின் பாடம் இப்படித்தான். ஏசத்துவங்கினால் முடியாது. பாட வேளையில் அரைவாசி ஏச்சுக் கேட்பது பொடியன்மாருக்கும் பழகிப்போய் விட்டது.

இவர்கள் பல்கலைக்கழகத்தில் என்னதான் படிக்கிறார்களோ? கற்பிப்பதில் தனக்குள்ள திறமையின்மையை மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் திட்டித் தீர்ப்பதால் ஈடுசெய்ய முற்படுகிறார்களே என்று ருஹைம் நினைத்தான்.

ஒரு சிலர் இவ்வாறு செய்யும் தவறுகளால், புனிதமான ஆசிரியப் பணியின் பத்தினித் தனத்திற்தே வேட்டு வைக்கப்படுவது ருஹைமிற்குக் கோபத்தை உண்டுபண்ணியது.

நேரம் எட்டு முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

இன்று ருஹைம் ‘நல்ல பிள்ளை’. ஹோம் வோர்களை செய்திருந்தான். அதனால் சிக்கல்கள் இல்லாமல், ராஸியா டீச்சரிடம் அனுமதி எடுத்து அஸ்ஸம்ப்லி ஹோலைப் போய் சேர்ந்தான்.

****

பொடியன்மார் சிலரும், புள்ளகள் சிலரும் புரோக்ரேமிற்கு பிரக்டிஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பாடசாலை கீதம், தேசிய கீதம் என்பவற்றிற்காக பாடசாலை வாத்தியக் குழுவும், சில மாணவிகளும் வந்திருந்தார்கள்.

ஏனைய நிகழ்ச்சிகளைப் பொறுத்த வரை, அவற்றை மேற்கொள்ளப் போகின்றவர்கள் யார் என்பது பற்றிய இறுதி முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது.

இறுதியாக நடந்த பேச்சுப் போட்டிகளில் ருஹைமிடம் தோற்ற நப்ராஸும், நுஷ்ரத் பர்வினும் புதிதாக ஏன் இங்கு வந்திருக்கிறார்கள்? என்பது ருஹைமிற்குப் புரியவில்லை.

அந்த மணடப சூழல் ஓர் அழையா விருந்தாளி மனநிலையையும், அந்நியத் தன்மையையும் தோற்றுவிக்கும் காரணமும் அவனுக்கு விளங்கவில்லை.

அவசரகமாக ருஹைமைப் பேசிக் காட்டுமாறு கூறி, அனுப்பி விட்டார்கள்.

ருஹைம் பேசுகின்ற போது, அவனது பேச்சைக் கவனிக்காமல் வேறு கதைகளில் ஈடுபட்டிந்ததும், ஆசிரியர்களின் முகபாவமும் ருஹைமுக்கு இன்னதென்று சொல்ல முடியாத திருப்தியின்மையை உண்டு பண்ணியது.

****

நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்து பேச வேண்டியது ருஹைம்.

பெரும் பேச்சாளர் ஒருவருக்கும் கூட பெரும் கூட்டத்தைக் காண்கின்ற போது, ஓர் இலேசான நடுக்கமும், தயக்கமும் ஏற்படத்தான் செய்கிறது.

அப்படியிருக்க ருஹைம் எம்மாத்திரம்?

இதயம் துடிக்க மறக்கும் இறுதிக் கணங்கள்...

அவனது மனநிலையைப் புரிந்து, நண்பர்களும் கேலி செய்வதைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு, அவனை உட்சாகமூட்டினார்கள். “நல்லா செய் மச்சான்”.

தான் அறிந்த குர்-ஆன் ஆயத்துக்களையும், பிரார்த்தனைகளையும் ஓதி மனதைத் திடப்படுத்திக் கொண்டான்.

நண்பர்களின் உட்சாகமூட்டல் அவனது மனதுக்கு இதமாக இருந்தது.

விசேட அதிதியின் உரை முடிந்து, ருஹைம் பேச வேண்டிய நேரம். அறிவிப்பாளர் அறிவித்தார்.

“தனது பாரிய வேலைப் பழுவுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த எமது விசேட அதிதி புரபஸர் நஜீப் அஹ்மத் அவர்களுக்கு எமது நன்றிகள். அடுத்து இடம்பெறப் போகின்ற நிகழ்வு எமது பிராந்தியத்தோடு சம்பந்தப்படுகிறது.... ஆம். இப்பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சியில் எமது பாடசாலையின் பங்கு என்ன? இதைப் பற்றி ஓர் உரையை நிகழ்த்துவதற்காக நாம் அழைப்பது.....”

அறிவிப்பாளர் மூச்சு வாங்கிக் கொண்ட சில வினாடிகள் யுகமாகத் தெரிந்தது ருஹைமிற்கு.

“ஆம். அந்த உரையை நிகழ்த்துவதற்காக நாம் அழைப்பது தரம் பதினொன்று மாணவி நுஸ்ரத் பர்வின் அவர்களை”.

ருஹைமிற்கு முன் உலகம் சுழல்வது போன்றிருந்தது. நண்பர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

பாடசாலை மேடைகளில் ஏறிப் பேசுகின்ற அளவுக்கு தனக்குத் தகுதி இல்லையா என்று ருஹைமுக்குத் தோன்றியது.

நண்பர்களின் கண்களை நேரிடையாக நோக்கும் தைரியம் இல்லாமல், வேறு திசையில் திரும்பிக் கொண்டான்.

அவன் விழிகளில் தோன்றியிருந்த கண்ணீரினூடாக மேடையில் பேசிக் கொண்டிருந்த நுஸ்ரத் பர்வின், ருஹைமிற்கு மங்கலாகத் தெரிந்தாள்.

உண்மையில் என்ன நடந்தது?
(யாவும் கற்பனை)

ரிஸா ஜவ்பர்
அக்குறணை - கண்டி,
இலங்கை

(2013இல் நியூஸ்வீவில் பிரசுரமானது.
தூரிகை முதல் இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது).