டுபாய் சர்வதேச விமான நிலையம்
குவைட்டில் இருந்து நளீம் நாடு திரும்பிக் கொண்டிருந்தான்.
குவைட்டில் இருந்து டுபாய் வந்து, அங்கிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறி, இலங்கை வந்து சேர வேண்டும். ட்ரான்ஸிட் ப்ளைட்.
பாஸிலை அங்கு சந்திப்போம் என்று நளீம் எதிர்பார்க்கவில்லை. கதாரி எயார்வேஸின் வியாபார வகுப்பில் வந்தானாம்.
ஷார்ஜாவில் இருந்து நேராக டுபாய் வந்து, வேலைகளை முடித்துக் கொண்டு, இரண்டு வாரங்களில் மலேசியா போவானாம்.
எப்படி இருந்தவன்? இப்போது எப்படியாகிவிட்டான்?
என்ன மிடுக்கு? என்ன அகம்பாவம்?
பாஸிலை நினைத்தால், நளீமுக்குப் பொறாமையாகவும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி என்று எத்தனையோ நாடுகளுக்கு இந்த வயதிலேயே போய் வந்து விட்டான்.
மடகஸ்கருக்குக் கூட அண்மையில் போய் வந்ததாக யாரோ சொன்னார்கள்.
ஓலெவெலில் கொப்பில் தொங்கியது போல் சித்தியடைந்து, ஏ-லெவலில் கோட்டை விட்டாலும், திடீரென்று ‘பிக்அப்’ ஆகியவன் பாஸில். நளீமின் சிறுவர் பருவ நண்பன். அவனை விட ஒன்றிரண்டு வருடங்கள் மூத்தவன்.
இப்போதோ எனின், அவனுக்கு நாடு பூராகவும், ஏன் உலகம் பூராகவும் சொத்துக்கள்.
இத்தனைக்கும் பாஸில்ஒன்றும் ஹாஜியார் வீட்டுப் பிள்ளை கிடையாது. சொல்லப் போனால், நளீமை விட மிகவும் நலிந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவன்.
நேரம் நள்ளிரவு…
அந்த விமானத்தில் குடிப்பதற்குக் கஞ்சு கூட கொடுக்கவில்லை.
தூங்க முயற்சி செய்தான். தூக்கம் வரவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து ஊர் செல்கிறான். எப்படித் தூக்கம் வரும்?
நளீமின் கல்யாண விஷயம் பற்றி, வைபரில் பேசும் போதெல்லாம் உம்மா நச்சரித்துக் கொண்டிருந்தாள். எதையுமே தலையில் போட்டுக் கொள்ளாமல், ஊருக்கு வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என நளீமும் தட்டிக் கழித்து வந்தான்.
இந்த விடுமுறை காலத்து நிகழ்ச்சி நிரலில், கல்யாணப் பேச்சு வார்த்தையும், பெண் பார்க்கும் படலமும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நினைவு, அவன் இளம் உள்ளத்தில் குதூகலத்தை உண்டு பண்ணியது…
விமான ஜன்னலுக்கு வெளியே வானத்தைப் பார்த்தான்.
சுபஹிற்கு இன்னும் நீண்ட நேரமாகும் போல் தெரிந்தது. கொழும்பு நகரில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக விமானி அறிவித்தார்.
குறுகுறு என்ற ஒலிப் பெருக்கிச் சப்தம் அவனுக்கு நகைப்பை உண்டு பண்ணியது. இலங்கையில் ரயில் நிலையங்களில் அறிவிப்பு செய்வார்களே… ஒலிப் பெருக்கியின் கரகரப்புச் சப்தம் அப்படித்தான் இருந்தது.
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டதும் கண் அயர்ந்தான்…
*****
விமானத்தினுள் நளீம் உட்கார்ந்திருக்கிறான்.
பாஸில் வருகிறான்.
“மச்சான், எனக்கு ஒரு உதவி செய்வியா?”, பதட்டத்தோடு கேட்கிறான்.
“இந்தப் பார்சல எங்கட வீட்ல கொடுக்கணும்”, ஒரு பார்ஸலை நீட்டுகிறான்.
“ப்ளீஸ் மச்சான், எனக்கு மலேசியால ஒரு வேல இருக்கு… அவசரமா போகணும்…”
“அதுல என்னடா கஷ்டம்…?” என்று வேண்டா வெறுப்பாக பார்சலை வாங்கி வைத்துக் கொள்கிறான் நளீம்.
பாஸில் மறைகிறான். திடீரென்று டுபாய் பொலிசார் இருவர் தோன்றுகிறார்கள். தம்மோடு நளீமை அழைத்துச் செல்கிறார்கள்.
இப்போது கியூபாவில் உள்ள அமெரிக்காவின் குவாண்டனோமா தடுப்பு முகாமில், செம்மஞ்சல் நிற ஆடைகளை உடுத்திய வண்ணம் நளீம் தோன்றுகிறான். கைதிகள் சித்திரவதை செய்யப்படும் போது, அவர்கள் எழுப்புகின்ற கல்லையும் கரையச் செய்யும் ஓலங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலே சித்தம் கலங்கிப் போகும் போல, அந்தளவு பயங்கரம் நிறைந்த இடமாகத் தோன்றுகிறது.
அமெரிக்கப் பொலிஸர் இருவர் வருகிறார்கள்.
ஒருவர் வெள்ளையர். மற்றவர் கருப்பர். “சொல்…. இந்தப் பார்சலை எங்கே கொண்டு போனாய்? உண்மையைச் சொன்னால் தண்டனை குறைக்கப்படலாம்”, அமெரிக்க ஆங்கிலத்தில் மிரட்டல் தொனியில் கேட்கிறார்கள்.
அது தன்னுடைய பார்சல் அல்ல என்று சொல்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். வாயில் இருந்து சப்தமே வெளிவரவில்லை. “இவனை இப்படிக் கேட்டால், சொல்ல மாட்டான். இதற்கு வேறு ஸ்டைல் இருக்கிறது”, யாரையோ கூப்பிடுகிறார்கள்.
தென்னிந்திய பாணியிலான பொலிஸ் காவலரணுக்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள். மன்ஸூர் அலிகான் ஸ்டைலில் பொலிஸ் இன்ஸ்பக்டர் ஒருவர் தமிழும், மலையாளமும் கலந்து பேசுகிறார்.
“இவ்விடத்தே நீ சத்யம் பறையுற மாதி இல்லே”.
நான்கு பேர் வருகிறார்கள். நளீமின் ஆடைகளைப் பலாத்காரமாகக் கலைகிறார்கள்.
நிர்வாணமாய் நிற்கிறான்.
குதிரையின் உயரத்து நாய் ஒன்று மெதுவாக அவனை நோக்கி நகர்கிறது. அது மூச்சு விடும் சப்தமே ஒரு வங்காளப் புலியின் உறுமலாக வெளிவருகிறது.
இன்னும் ஒரு சில வினாடிகள்.
சில வினாடிகள்…
அந்த நாய் பாய்ந்தது என்றால், எதுவுமே மிஞ்சாது.
நாய் பாய்கிறது.
வன்… டூ…..
……
“யா அல்லாஹ்… என்ன காப்பாத்து”, பலத்தையெல்லாம் சேர்த்து, கத்துவதற்கு முயற்சி செய்கின்றான்.
****
“மிஸ்டர், ஆர் யூ ஓல்ரைட்?” விமானத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த பிலிப்பைன்காரர் நளீமைத் தட்டி எழுப்பினார்.
“அல்-ஹம்துலில்லாஹ்”, இவ்வளவு நேரம் அவன் கண்டது கனவுதான்; நிஜமல்ல. ஆனால், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் விடுபடவில்லை. இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. வியர்த்துக் கொட்டுகிறது.
அவன் தூக்க மயக்கத்தில் பிதற்றி இருக்க வேண்டும். அதைக் கண்டுதான் அந்த பிலிப்பைன்காரர் தட்டி எழுப்பி இருக்கிறார். நளீமுக்கு சங்கோஜமாகவும் இருந்தது.
“நோ… நோ.. தேங்க்ஸ்… நதிங்க். ஐ வோஸ் ஜஸ்ட் ட்ரீமிங்க்” என்று சொல்லி வைத்தான்.
பிலிப்பைன்காரரும் பரவாயில்லை என்பது போல் கைகளால் சைகை செய்து புன்னகைத்தார்.
சிக்மன் பிராய்டின் இன்டர்ப்ரிடேஷன் ஒப் ட்ரீம் போன்ற புத்தகங்களை எல்லாம் அவன் வாசித்திருக்காவிட்டாலும், கனவுகள் குறித்த உளவியல் அறிவு அவனுக்கு ஓரளவு இருக்கவே செய்தது.
எனவே, இந்தக் கனவைக் குறித்து அலட்டிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என அவன் அறிவு அறிவுறுத்தியது. ஆனால், அவன் மனம் அறிவுக்குக் கட்டுப்படவில்லை.
உண்மையிலேயே, பாஸில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து, ஒரு பார்சலை எடுத்துச் செல்ல முடியுமா என்று கேட்டதும் இப்போது ஞாபகம் வந்தது.
எனினும், கடைசியில் எடுத்து வர வேண்டிய தேவை வரவில்லை என்பதை நினைக்கும் போது, அவனுக்கு மிகுந்த மனத் திருப்தி உருவானது.
****
பாஸிலின் உண்மையான தொழில் என்ன என்பது பற்றிய பல்வேறு வதந்திகள் ஊருக்குள் வழங்கி வந்தன. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு கோடி, கோடியாக சம்பாதித்து வருவதாகச் சிலர் சொன்னார்கள்.
மலேசியாவில் பழைய ராஜா ஒருவருக்குச் சொந்தமான பங்களா ஒன்றிற்குச் சென்ற போது, அங்கே பழங்காலப் புதையல் ஒன்று கிடைத்ததாக ஒருவர் சொன்னார்.
கிரடிக் கார்ட் மோசடியில் ஈடுபட்டுப் பணம் சேர்த்ததாகவும், ஹெரோயின், விபச்சார விடுதி, சூதாட்ட விடுதி, ஆட்கடத்தல் என இவன் சம்பந்தப்படாத தொழிலே இல்லை எனவும் சிலர் சொன்னார்கள்.
அவுஸ்திரெலியாவிற்குப் படகு மூலம் ஆட்களை இவன் அழைத்துச் செல்வதாக ஒருவர் சொன்னார்.
எல்லாம் கதைகளில் வரும் செய்திகள் போல இருந்தனவே தவிர, எதுவும் நம்பும்படியாக இல்லை… அந்த மூடத்தனமான செய்திகளில் ஏதேனும் உண்மை இருக்கலாமோ என்று இப்போது நளீமுக்குத் தோன்றியது.
திடீரென்று அவனுக்கு இப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்ததில் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு தொகை சொத்துக்களை எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் சேர்த்துக்கொள்ள முடியும்..!
ஒரு வேளை, ஒரு திறமையான போதைப் பொருள் கடத்தல்காரனான அவன் இருக்கவும் முடியும்.
இவ்வாறு நளீமின் மனது, பாஸில் குறித்து சிந்தனை செய்தது. இவ்வாறு அவன் நினைத்தாலும், பல்கலைகழகம், இன்னும் அது, இது என்று தன் பெயருக்குப் பின்னால், பத்துப் பதினைத்து எழுத்துக்களைப் போட்டுக் கொள்ளக்கூடிய அளவுக்குப் படித்திருக்கின்ற தன்னை விட, இவன் எப்படி இவ்வளவு பணம் சேர்த்தான் என்ற பொறாமையும் வசதியாக மறைந்திருந்தது.
இவ்வாறு பல்வேறு விடயங்களை நினைத்துக்கொண்டிருந்த நளீம், சுபஹ் தொழுகைக்கு நேரம் சரியாக இருக்கும் போல் தோன்றவே, தொழுகையை நிறைவேற்றத் தயாரானான். தொழுகை முடிந்ததும், இலேசாகக் கண்களை மூடிக் கொண்டான்.
மீண்டும் அவன் கண் விழிப்பதற்கும், அந்த விமானம் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த போது, சூரியன் உதித்திருந்தது.
இலங்கை நேரப்படி, காலை ஆறு முப்பது.
தாய் நாட்டுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைக்கின்றான்.
ஜனநாயக காற்று….
சுதந்திர தேசம்…
தாய் மண் என்கிற உரிமை….
இப்போதுதான் இலங்கை சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் கதையளந்து நேரம் போக்கிக் கொண்டிருந்தார்கள். உறங்கா நகரங்களை எல்லாம் பார்த்து விட்டு வருகின்ற எல்லோருக்கும் வரும் எறிச்சல் அவனுக்கும் வந்தது.
அவனை அழைத்துச் செல்ல மூத்த நானாவும், வாப்பாவும் வந்திருந்தார்கள். வீடு செல்லும் வரை பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடினார்கள்.
****
வேவல்தெனியவில் காலையுணவு அருந்தி விட்டு, மலையகத்தில் இருக்கின்ற தன் வீட்டை சென்றடைந்த போது, சுமார் பதினொரு மணி தாண்டி இருந்தது.
சுகம் விசாரிப்புக்கள்… பழைய நண்பர்கள்… தூரத்து உறவுகள்… என ஏகப்பட்ட தடபுடல்.
வெளிநாடு சென்று வந்தவன் என்றால், கேட்கவா வேண்டும்?
தடபுடல்கள் ஓய்வதற்கு சில நாட்கள் ஆயின. உம்மாவிற்குத் தலை, கால் புரியாத சந்தோஷம்….
பயணம் செய்ததன் களைப்பு இப்போதுதான் குறைந்திருந்தது.
உம்மா… வாப்பா… நானாமார் இருவர்… அவர்களின் மனைவிமார்… பிள்ளைகள்… தங்கச்சிமார் இருவர்… மச்சான்… இதுதான் நளீமின் குடும்பம்.
தங்கச்சிமார்களில் ஒருத்தி ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
நளீமும், கடைசித் தங்கச்சியும் மட்டுமே இன்னும் திருமணமாகாமல் இருந்தார்கள்.
சிறிது காலமாகவே வீட்டில் இருவருக்கும் பயங்கரமாகத் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
நளீம் இரண்டு நானாமாருடன் பிறந்தவன்…. அதுவும் குடும்பத்தின் முழுப் பாரத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு செய்பவர்கள்…
இந்நிலையில், வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை என்கிற போது, அதில் கலந்து பேசுவதற்கு சங்கோஜம் தோன்றுவது இயல்புதானே…!
எனவே, நண்பர்களைத் தேடி வெளியே போய் விட்டான், ஏனைய பிரம்மச்சாரி இளைஞர்கள் போலவே…!
****
இலேசான மழைத் தூற்றல் இப்போதுதான் நின்றிருந்தது. கருமேகங்களுக்கு இடையே சூரியன் இலேசாக எட்டிப் பார்த்தான்.
இலைகளிலும், தென்னை ஓலைகளிலும் மழைத்துளிகள் அப்படியே இருந்தன.
அந்த நீர்த் திவளைகளில் சூரியக் கிரணங்கள் பட்டுத் தெரித்த போது, முத்துக்கள் போன்று நீர் திவளைகள் ஜொலித்தன.
நனைந்த மண்…
மண் வாசனை…
அந்தி வெயில்…
இதமான காற்று…
பெண் பார்க்கப் போகிறோம் என்ற இன்ப நினைவு.
இத்தனையும் சேர்ந்து கொண்டால், ஒருவன் கவிஞனாகி விட மாட்டானா?
அத்தகையதொரு போதை மயக்கத்தில்தான் அப்போது நளீம் இருந்தான். ஆனாலும், அவனுடைய இதயத் துடிப்பு மட்டும் சற்று வேகமாக இருந்தது.
கட்டுகஸ்தோட்டை நகரத்தின் மையத்தில் இருந்து, மகாவலி கங்கையை கடக்கும் பெரிய பாலத்தைக் கழித்து, கண்டித் திசையில் அந்தோனியார் பெண்கள் கல்லூரியை தாண்டி சில மீற்றர்கள் அண்மித்தால், வீரக்கோன் கார்டின்.
அந்த அழகான செழிப்பான சூழலில் அமைந்திருந்தது பெண் வீட்டாரின் வீடு.
நளீம், உம்மா, வாப்பா, மூத்த நானா, மைனி ஆகிய ஐந்து பேரையும் சுமந்த வேன் பெண் வீட்டைச் சென்றடைந்தது…
பெண் வீட்டாரும் நளீமின் ஊரைச் சேர்ந்தவர்கள்தானாம்…! சில வருடங்களுக்கு முன்புதான் இங்கு புதிதாக வீடொன்றை வாங்கிக் குடியேறி இருக்கின்றார்களாம்.
சம்பிரதாயபூர்வமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அவை எதுவும் நளீமின் மனதில் பதியவில்லை.
****
பெண் பார்த்து வந்ததில் இருந்து, நளீம் ஏதோ கற்பனையில் மிதந்தான். அவன் உடல்தான் வீட்டில் இருந்ததே தவிர, மனம் அவன் வருங்கால மனைவி ஷானாஸையே சுற்றிச் சுற்றி வந்தது.
வீட்டில் இருப்பதற்கு ஆட்கொள்ளவில்லை. நண்பர்களைத் தேடி சென்று விடுவான். இரவில் கனவுகளில் கூட இந்த நினைவுகள்தான்.
அன்று நானாமார் இரண்டுபேரும், மூத்த தங்கச்சியும் வீட்டில்தான் இருந்தார்கள்.
“ஒன்னோட பேசணும், பேசணும் என்டு பாத்தா, நீ வீட்ல ஈக்கிறதே இல்லையே…” வாப்பா ஆரம்பித்தார்.
“பொண்ட (ஷானாஸுடைய) நானாவொன்டு இருக்குற. ஒனக்கு தெரிஞ்சிருக்கும். நானாக்கு நல்லாத் தெரியும். பேர் பாஸில். பெரிய பிஸ்னஸ் மேன். நல்ல பொடியன். நீ குவைட்ல ஈக்குற நேரம், ஆள் சின்னத் தங்கச்ச வந்து பொண் பாத்துட்டுப் போன. ஆளுக்கும் நல்லா விருப்பம்….. இப்ப ஷானாஸ ஒனக்கும் விருப்பம் என்றதால, மாத்திக் கட்டிடலாம். நான், நானாவெல்லாம் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்டா எடுத்துடுவோம் என்டு முடிவெடுத்தோம்….” வீட்டின் ஷூறா முடிவை வாப்பா அறிவித்தார்.
பாஸில்…
அந்தப் பெயரைக் கேட்ட உடனே அவன் உலகம் நின்றது. தனது கனவுகளில் வந்து கொண்டிருக்கும் தன் உள்ளத்தைக் கவர்ந்து விட்ட ஷானாஸ், கேவலம் போதைப்பொருள் வியாபாரியொருத்தனின் தங்கையா?
இந்த அதிர்ச்சியைத் தாங்குவதே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. எல்லாம் தன் கட்டுப்பாட்டைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது….
வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் கலைகட்டி விட்டது. மாமியார் வீட்டில் இருந்தும், இரண்டு, மூன்று தடவை வந்து போய் விட்டார்கள். மிகப் பெரிய சிக்கலில் தன் குடும்பம் மாட்டிக் கொண்டிருப்பதாக நளீமின் உள்மனம் அறிவுறுத்தியது.
இதற்குத் என்ன தீர்வு? விடயத்தைப் போட்டு உடைப்பதா? அல்லது இந்தத் தவறை மௌனமாக அங்கீகரிப்பதா? தான் நினைத்தது போல், உண்மையிலேயே பாஸில் ஒரு போதைப் பொருள் வியாபாரிதானா? அல்லது வெறும் சந்தேகம்தானா? சில எண்ணங்கள் பாவமானவை என்று குர்ஆன் சொல்வது போல, தானும் தப்பெண்ணம் என்கிற அத்தகையதொரு பாவத்தில்தான் வீழ்ந்து கிடக்கின்றேனா?
இத்தனை தூரம் இக்கல்யாண ஏற்பாடுகள் சென்ற பிறகு, இதனை நிறுத்த முயற்சி செய்தால், எத்தனை குழப்பங்கள் உருவாகும்? மட்டுமல்லாமல், பாஸிலின் நிழல் வாழ்கை குறித்த எந்தவொரு விடயமும் நளீமுக்கு உறுதியாகத் தெரியாது.
அவ்வாறிருக்க இது பற்றி மற்றவர்களிடன் இது பற்றிக் கதைப்பது எப்படி? அவர்களை நம்ப வைப்பது எப்படி?
டுபாய் விமான நிலையத்தில் பாஸில் இவனை மச்சான் என்று சொன்ன போது, அதில் சற்று கூடுதல் மரியாதை இருப்பதாக தெரிந்தது. அதன் அர்த்தம் இதுதானா?
****
அன்று மாலை பேஸ்புக்கில் நண்பர்களுடன் அலாவளாவிக் கொண்டிருந்தான்.
“Back to Sri Lanka… Going to get married soon insha allaah… Please pray for me” (இலங்கை திரும்பிவிட்டேன். கூடிய சீக்கிரத்தில் திருமணம் இன்ஷா அல்லாஹ். எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்)”.
பாஸிலின் பேஸ்புக் ஸ்டேடஸ் நளீமின் கவனத்தைக் கவர்ந்தது.
பாஸில் நாட்டில்தான் இருக்கிறான். உடனே அவனை சந்தித்து, அப்பட்டமாக அனைத்தையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
தேவை ஏற்பட்டால், ஒற்றைக் காலில் நின்று இந்தக் கல்யாணத்தை நிறுத்தியாக வேண்டும்.
குறைந்தபட்சம் தங்கச்சிக்காகவாவது இதை செய்ய வேண்டும்.
“நான் ஒன்றும் சின்னப் பிள்ளையில்லையே..!”
உடனே பாஸிலை பேஸ்புக்கில் தொடர்பு கொண்டான்.
“ஸலாம்..”
“வ’அலைக்குமுஸ்ஸலாம், மச்சான்”.
அதற்குள் பாஸில் இவனுக்கு மச்சானாகி விட்டான்.
ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது நளீமுக்கு. இருவரும் சந்திப்பதற்கு நாள் குறிக்கப்பட்டது. உஸாமா பின் லாதினை சந்திப்பதாக இருந்திருந்தால், ஒபாமா கூட இந்தளவு தயாராகி இருந்திருக்க மாட்டார்.
****
பேச்சுவார்த்தைக்கு என்று குறிப்பிடப்பட்ட அந்த நாளும் வந்தது.
“நான் நேரடியாக விஷயத்திற்கு வாரேன்… ஒளிவு மறைவில்லாம நாங்க பேசிடுவோம்”.
நளீமின் முகத்தில் கடுமை பரவியிருந்தது. பேச்சுத் தோரணை டிப்லோமடிக்காக இருந்தது.
“ஓ.கே”
பாஸிலின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன. நளீம் சொல்லப் போகும் விடயங்களைக் கேட்க, பாஸில் தன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டான்.
“ஊருக்கு ஒன்னப் பத்தி… சொறி... ஒங்களப் பத்தி … நெறய வதந்திகள் இருக்குது…. நான் அதையெல்லாம் நம்புறவன் இல்ல. க்ளியர் பண்ணிக்கொள்ள விரும்புறேன்”.
இப்போது பாஸிலின் முகத்தில் அகன்றதொரு புன்னகை அரும்பியது. இவ்வளவுதானா என்று கேட்கின்ற தோரணையில் இருந்தது அந்தப் புன்னகை.
“மச்சான், நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வெளிநாட்டில் இருக்கிறேன்” என்ற பீடிகையுடன் ஆரம்பித்த பாஸில் சொன்ன செய்திகளின் சாரம் இதுதான்;
ஏலெவல் பெய்லானவுடன் பாஸில் குடும்பத்தில் கேட்க வேண்டி இருந்த ஏச்சுப் பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
வாழ்க்கையே கசந்து போகும் அளவுக்கு ஆகி விட்டது.
எப்படியும் வாழ்க்கையில் முன்னேறியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது.
ஷார்ஜாவிற்கும் அங்கிருந்து கட்டாரிற்கும் போனான். சில வருடங்கள் இப்படியே பெரிய முன்னேற்றம் இல்லாமல் கழிந்தன.
கடுமையாக உழைத்தான். அறிவு ரீதியாகவும் தன்னை வளர்த்துக் கொண்டான். அதன் பிறகுதான் கடைசியாக குவைட்டை சேர்ந்த ஷெய்குடன் பழக்கம் ஏற்பட்டது.
அதுதான் அவன் வாழ்வின் திருப்பம். அவனுடைய அறிவு, திறமை, அனுபவம், நேர்மை எல்லாம் சேர்ந்து வாழ்வின் அதி உச்சத்திற்கு அவனை கொண்டு சென்று விட்டது.
அவனால் ஷெய்கும், ஷெய்கால் அவனும் வளர்ந்தார்கள். உலகம் பூராகவும் வியாபார நிமித்தமாக சென்று வந்தான். எம்.பீ.ஏ பட்டம் கூடப் பெற்றிருந்தான்.
“என் தியரி ஒன்றே ஒன்றுதான். நேர்மையாகவும், ஹலாலாகவும் முயற்சி செய்ய வேண்டும். உலகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், சவால்களுக்கு ஏற்ற வகையில், எங்களை உருவாக்கிக்கொள்ளணும். அவசரப்படக்கூடாது. வெற்றி எங்களைத் தேடி வரும்…”
அவன் பேச்சைக் கேட்கக் கேட்க, தான் ஒரு மிகப் பெரிய வணிக மேதையொருவருடன் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற மதிப்பச்சம் நளீமிற்கு உருவானது.
“இது எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் நாட்டம் என்ற ஒரு விஷயமும் உண்டு. அவன் கொடுப்பதை தடுப்பதற்கோ, தடுப்பதைக் கொடுப்பதற்கோ யாரும் இல்லை. வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே கண்ட எனக்கு, அல்லாஹ் மிக நல்ல மனிதரொருவரை மொதலாளியாகத் தந்தான். நிறைய பேருக்குக் கிடைத்தாத பாக்கியம் இது”.
“இதை எல்லாம் நீங்க நம்பலாம். இல்லாமலும் இருக்கலாம். எங்கள் சமூகத்தில் இப்படித்தான். வசதி வாய்ப்பு இல்லாத நேரத்தில் ஒருவரை ஒதுக்குவார்கள். கேவலப்படுத்துவார்கள். மனிதனாகவே மதிக்க மாட்டார்கள். வசதி வாய்ப்புக்கள் வந்து விட்டால், பொறாமைப்படுவார்கள்”.
பாஸில் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கும் என்றே நளீமிற்குத் தோன்றியது.
ஆனால், அத்தனை இலகுவில் அதனை ஏற்றுக்கொள்ள அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
“எனக்குத் தெரியும்…. நான் விபச்சார விடுதி நடந்துவதாக சிலர் கதை பரப்பினார்கள். அப்படிக் கதை பரப்பியவர்கள் யார் என்றும் எனக்குத் தெரியும். அதைப் பற்றி எல்லாம் நான் உங்களிடம் கதைக்க விரும்பவில்லை. அது அழகல்லவே…! பண்பாடும் அல்ல”.
“...ஆனால், ஒன்றை மட்டும் நான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் முதலில் என்னை மாப்பிள்ளை கேட்டு வீட்டிற்கு புரோக்கர் அனுப்பினார்கள். சில காரணங்களை உத்தேசித்து நான் மறுத்து விட்டேன். அதன் பிறகுதான், அந்தக் கோபத்தில் இப்படிக் கதை பரப்பியிருக்கிறார்கள். விபச்சார விடுதி நடத்துவதாகக் கதை பரப்பியவர்கள் எதற்காக மாப்பிள்ளை கேட்டு வீட்டிற்கு புரோக்கர் அனுப்ப வேண்டும்?”
பாஸில் குறித்து நளீமிடமும் சிலர் தாறுமாறாகப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் தம்மளவில் ஒன்றும் யோக்கியர்கள் என்றும் சொல்லி விட முடியாது.
தவிரவும், இவ்விதம் கதை பரப்புபவவதற்கு அவர்களுக்கு தனிப்பட்ட கோபதாபங்கள் ஏதேனும் இருக்க முடியுமா என்று அப்போதே அவனுக்கு சந்தேகம் எழுந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள கதைகள் அவை. அவை குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை அப்போது அவனுக்கு உருவாகவில்லை.
பாஸில் தொடர்ந்து பேசினான்.
“நான் எப்படிப்பட்டவன் என்று இன்னும் நீங்கள் சந்தேகிப்பதாக இருந்தால், இங்கே பெண் தேட வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? என் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும்….” சிறிது நேரம் மௌனம் சாதித்த பாஸில் தொடர்ந்து சொன்னான்.
“உங்கள் தங்கச்சியை நான் நல்லபடியாகப் பார்த்துக் கொள்வேன்… கவலைப்படாதீர்கள்… இதற்கு மேலும் என்னை நீங்கள் நம்பாவிட்டால், உங்கள் தங்கச்சியை எனக்கு கொடுக்க வேண்டாம். ஆனால், என் தங்கச்சியை வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள். அவள் மிகவும் நல்ல பெண். என் குற்றத்திற்கு அவள் பொறுப்புதாரி இல்லையே…!”
பாஸில் சொல்லாவிட்டாலும், நளீம் புரிந்து கொண்ட மேலும் பல விடயங்கள் இருந்தன.
பாஸில் நினைத்தால் அவனுக்குப் பெண் கொடுப்பதற்கு எத்தனையோ பணக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். அவன் தங்கையை மணம் முடிப்பதற்கும் எத்தனையோ பேர் தயாராக இருக்கிறார்கள். பாஸிலோடு ஒப்பிட்டால், நளீம் ஏழைதானே…!
பாஸில் தன் வாய்ப்பு மற்றும் எந்த விடயத்தைப் பார்த்தும் இந்த சம்பந்தத்தைப் பேசி வரவில்லை என்பதிலும் சந்தேகமில்லை. தான் இவ்விதம் இடித்துக் கேட்டதற்கு அவன் மிரண்டெழவும் இல்லை. வேறு எவராகவும் இருந்தால், எப்படிக் கொதித்திருப்பார்கள்? எவ்வளவு பிரச்சினைகள் உருவாகி இருக்கும்? சில போது, கல்யாணமே நின்று போய் இருக்காதா? ஆனால், பாஸில் இது விடயத்தில் எந்த சலனத்தையும் காட்டவில்லை.
இன்னொரு விடயம்.
பாஸிலின் தங்கச்சியைப் பொறுத்த வரை, குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இத்தனை தூரம் வந்த பிறகு, இஷ்டம் இல்லை என்று சொல்வதற்கும் வேறு எந்தக் காரணமும் இல்லை.
அநியாயமாக ஒருவன் குறித்த தப்பெண்ணம் கொண்டு விட்டேனே, ஷைத்தான் எப்படியெல்லாம் மனித மனத்துடன் விளையாடுகிறான் என்ற குற்ற உணர்வு மட்டுமே நளீமிடம் இப்போது எஞ்சி இருந்தது.
(யாவும் கற்பனை)
ரிஸா ஜவ்பர்
அக்குறணை - கண்டி,
இலங்கை
(தூரிகை, இதழ் 01, 2016, ஜனவரி)