Wednesday, 28 June 2017

ஜனரேஷன் கெப் - சிறுகதை

மேற்குத் திசை சிவந்து, வானம் வர்ணமயமாகியிருந்த அந்தி மாலைப் பொழுது....

ஸுஹைர் நானாவின் கடையில் லந்தர் விளக்குப் பற்ற வைக்கப்பட்டாயிற்று....

என்னதான் மின்சாரம் அரசோச்சினாலும், ஸ்மார்ட் போனில் உலகம் ஐக்கியமாகிவிட்ட காலத்தில், இன்னும் கூட எமக்கும் மவுசு இருக்கிறது என்பது போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்த லந்தர் விளக்கு....

அந்தக் கடைதான் அந்த சிறிய பஸாரில் இருக்கின்ற சுப்பர் மார்க்கட். காலையில் சிக்னல் வாங்குவதில் இருந்து, இரவில் நுளம்பு கடித்தால் கொசுவத்தி வாங்குவது வரைக்கும், அவசரமென்றால் பனடோல், சித்தாலேப, கசாயம், மொபைல் கார்ட் வாங்குவது வரைக்கும் என சின்னச் சின்ன சாமான்கள், அவசர சாமான்கள் வாகுவதற்கு மட்டும் நம்பப்பட்டு வந்த கடை.
   

பக்கத்திலேயே பெரிய பஸாரும் இருந்ததால், பெரிய சாமான்களை அங்கு பெரிதாக ஊர்க்காரர்கள் வாங்குவதில்லை. ஊர்க்காரர்களுக்குக் கட்டுப்படியாகும் படி, பஸார் விலைக்குக் கொடுப்பது என்றால், ஸுஹைர் நானாவிற்கும் கட்டுப்படியாகாது.

எனவே, வியாபாரம் ஒரு நோன்புக் கடை ரேஞ்சிற்குத்தான் இருந்தது.

மஃரிபுக்கு அதான் சொல்ல இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஒரு மோட்டார் சைக்கிள் ஸுஹைர் நானாவின் கடை முன் பிரேக் போட்டு நின்றது.

ஆபிஸில் வேலை முடித்து, ருக்ஷான் வந்து இறங்கினான். நம் ஸுஹைர் நானாவின் மூன்றாவது மகன். மூத்த தலைமுறையின் பார்வையில் சினிமாத்தனமான தோற்றம். எதனையும் "டேக் இட் ஈஸி.."யாக எடுத்துக்கொள்ளும் ரகம்.

ஸுஹைர் நானாவிற்கு பிள்ளைகள் ஐந்து பேர். முதல் மகன்மார் இருவரும் மனைவி, பிள்ளைகள் என்று தம் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய் விட்டார்கள்.

ருக்ஷானிற்கு இப்போது இருபத்து நான்கு வயதாகிறது. அடுத்த இருவரும் பெண் பிள்ளைகள். ஒருத்தி ஏ லெவலும், மற்றவள் ஓ-லெவலும் செய்கிறார்கள்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தியவன் ஸுஹைர் நானாவின் கடையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கடைக்குப் பக்கத்தில் உயர்ந்த சென்ற படிகளில் ஓட்டமும் நடையுமாக ஏறிச் சென்றான்.

ஸுஹைர் நானா பெருமூச்சி விட்டார். தன் பிள்ளைகளை எவ்விதம் உருவாக்க வேண்டும் எனக் கனவு கண்டாரோ, அவ்விதம் உருவாக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு...

கடைக்கு வந்திருந்த ரமீஸ் ஹாஜியாரிடம் தன் மன ஆதங்கத்தை வேறு விதமாக வெளிப்படுத்தினார். ''இந்தக் காலத்துப் புள்ளகள என்டா அல்லாஹ்தான் பாதுகாக்கணும்.... மூத்தாக்களுக்கு எந்த மரியாதையும் இல்ல...''.

''...அதென்டா உண்மைதான் ஸுஹைர் நானா..'' என்று கூறிய ரமீஸ் ஹாஜியார், ''...எல்லாப் புள்ளகளயும் அப்பிடிச் சொல்லவும் ஏலாது. உம்மா வாப்பாமார்ட வளப்புலயும் இருக்குது...'' என்று சொல்லவும், ஸுஹைர் நானாவின் மனத்தில் சுருக்கென்று தைத்தது.

ஸுஹைர் நானாவிற்கும், அவர் மகன் ருக்ஷானிற்கும் தினசரி பனிப்போர்தான் என்பது ஊரறிந்த இரகசியம். ஸுஹைர் நானா அது பற்றி யாரிடமும் சொல்வதில்லை. எவரும் அவரிடம் அது பற்றி விசாரிப்பதுமில்லை. ஆனால், ஊரில் அந்த விடயம் தெரியாதவர்கள் ஒருத்தருமில்லை.

ஸுஹைர் நானாவின் முதுகிற்குப் பின் அந்த விடயங்கள் அலசப்படும்.

வேறு பேச்சை வளர்க்காமல், ''...மஃரிபுக்கு பாங்கு சொல்லவும் நேரம் சரி எல்லயா...!'' என கடையை மூட ஆரம்பித்தார் ஸுஹைர் நானா.

*******
மஃரிப் தொழுது முடித்து, இஷா தொழுகையும் நடாத்தப் பட்டாயிற்று... அந்தக் குட்டி பஸார் மூடப்பட்டாயிற்று. ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்த பொடியன்மார் ஓரிருவரைத் தவிர, வேறு மனிதர்கள் பாதையில் இல்லை.
ஆங்காங்கே தெரு நாய்களும் சஞ்சாரம் செய்து வந்தன. தமது குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, அவை ஒன்றை நோக்கி ஒன்று அவற்றின் பாசையில் குரைத்துக் கொண்டிருந்தன.

ஸுஹைர் நானாவின் வீடு...

ஸுஹைர் நானா அன்றைய தினசரிக்குள் முகம் புதைத்திருந்தார். மனைவி சமயலறையில் வேலை செய்துகொண்டிருந்தாள்.

ருக்ஷான் தன் ஸ்மார்ட் போனுக்குள் மூழ்கியிருந்தான். ருக்ஷானின் தங்கச்சிமார் பக்கத்து ரூமில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ருக்ஷான் போனை எடுக்கும் ஒவ்வொரு தடவையும் ஸுஹைர் நானாவின் முகத்தில் ஓர் எறிச்சல் ரேகை படரும். இப்போது கூட பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தாலும், அவருடைய மனம் அதில் முழுமையாக லயிக்கவில்லை. ருக்ஷான் ஸ்மார்ட் போனில் என்ன செய்து கொண்டு இருந்தான் என்று யாரரிவார்? வட்ஸ் அப்பில் செட் பண்ணிக் கொண்டிருக்கலாம்.

பேஸ் புக்கை செக் பண்ணிக் கொண்டிருக்கலாம். அல்லது ஏதேனும் ஓர் இணையத்தளத்தில் சஞ்சரித்திருக்கலாம்.

ருக்ஷானோடு ஸுஹைர் நானா பேச்சுக் கொடுத்தார்.

"...கம்பனில சம்பளத்த கூட்றதப் பத்தி ஏதாவது சொன்னாங்களா? " கணைத்துக் கொண்டே கேட்டார்.

ஏதோ கேட்க நினைத்து, வேறு ஏதோ கேட்டு வைத்தார். ஒரு பெருமூச்சோடு ஸ்மார்ட் போனில் இருந்து தலையைத் தூக்கினான் ருக்ஷான்.

கேள்விக்குப் பதில் சொல்லும் மனநிலையில் அவன் இல்லை என அவனுடைய முகக்குறி காட்டியது. ''...எங்கட அவசரத்துக்கு சம்பளம் கூட்டுவாங்களா?...'' எறிச்சலோடு பதில் சொன்னான்.

''....ம்ம்...'' ஓர் ஆழமான பெருமூச்சு ஸுஹைர் நானாவின் நுரையீரலின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டது.

திருப்தியற்ற ஒரு மனநிலையில் இருக்கிறார் என்பதை அவர் முகபாவணை காட்டியது. அதனை ருக்ஷானும் கவனிக்கத் தவறவில்லை.

''...ஒழுங்கா சயன்ஸ் படிச்சிருந்தா.... இந்த ஒரு கஸ்டமும் இல்ல...'' தனக்குள் மட்டும் சொல்லிக் கொண்டாரா அல்லது ருக்ஷானிடம் சொன்னாரா என்று சந்தேகப்படும் படியான சப்தத்தில் சொன்னார்.

மருத்துவர்கள் மட்டுமே படித்தவர்கள் என்று நினைக்கும் சராசரி மனிதர்களுள் ஒருவர் ஸுஹைர் நானா. ருக்ஷானைப் பற்றி அவர் பெரியதொரு கற்பனையை வளர்த்து வைத்திருந்தார்.

தான் இஷ்டப்பட்டது போல், தன் மகன் விஞ்ஞானம் படித்து மருத்துவனாகாமல், அவனுடைய இஷ்டப்படி ஏதோ கம்பியூட்டர், ப்ரோக்கிரேமிங்க் என்று வேறு துறைகளில் போய் விட்டான் என்ற கவலை பல ஆண்டுகள் கழித்து
ஸுஹைர் நானாவின் மனதில் பச்சை மரத்து ஆணி போல இன்று வரைக்கும் இருந்தது.

நேரம் காலம் தெரியாமல், அவருடைய கட்டுப்பாட்டையும் தாண்டி அது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தந்தை மகன் சண்டைக்கு இந்த ஒரு காரணம் பெரிதும் பங்களித்திருக்கக் கூடும்.

ருக்ஷான் ஒன்றும் படித்துக் கரைசேராதவனும் அல்லன் என்பதை இங்கு சொல்லி விடத்தான் வேண்டும்.

கம்யூட்டர் ஸயன்ஸ் படித்துப் பட்டதாரியாகி இருந்தான்.

எம்.எஸ்.ஸீ செய்வதற்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். சுமாரான சம்பளமும் வரவேசெய்தது. தன் தொழில் விடயத்தில் ஒரு மானசீகத் திருப்தியும் ருக்ஷானுக்கு இருந்தது.

ஆனால், ஸுஹைர் நானாவிற்கோ ஏதோ ஒரு திருப்தியின்மை, ஆழ் மனக் கவலை. பிரிதொருவரால் கண்டு கொள்ள இயலாத வேதனை, வெறுமை.

தன் மகனை மருத்துவனாக அறிமுகப்படுத்தி, மார்தட்டிக் கொள்ள முடியவில்லையே என்ற 
ஏமாற்றம்.....

அப்போது ஓலெவல் ரிஸல்ட் வந்திருந்தது. ருக்ஷானுடைய நானாமார் பெரிதாக ஓலெவலில் சோபித்திருக்கவில்லை. ஸுஹைர் நானா படித்ததெல்லாம் எட்டாம் வகுப்பு வரைக்கும் தான்.

ருக்ஷான் அந்தக் குடும்பத்தில் முதல் தடவையாக ஓலெவலில் நல்ல மார்க் வாங்கினான். ஐந்து ஏ. ஸுஹைர் நானா பெரிதும் கற்பனையில் மூழ்கினார்.

வாழ்கையில் கஷ்டம், ஏமாற்றத்துடன் காலம் தள்ளி, வாழ்க்கை வெள்ளத்தில் கரையேறக் கிடைத்த அருமையான வாய்ப்பு ருக்ஷான் மூலம் அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை மிக இருக்கமாகப் பற்றிக் கொள்ள நினைத்தார்.

அவர் நம்பிய புலியங்கொப்பே உடைந்து போகும் என்று கண்ட போது, ஸுஹைர் நானா நம்பிக்கை இழந்து போனார்.

ருக்ஷான் ஸயன்ஸ் படிப்பான். பெரிய டாக்டராவான். பணக்காரக் குடும்பத்தில் சம்பந்தம் வைக்கலாம். கார், பங்களா என்று ராஜபோக வாழ்க்கை. டாக்டரின் வாப்பா என்று ஊரில், தெரிந்தவர்களிடம், பள்ளிவாசலில், உறவுக்காரர்களிடம் மார்தட்டலாம். வாழ்க்கையின் பிரச்சினைகள் பல புஸ்வானமாகக் காணாமல் போய் விடும். ஊருக்குள் தனக்கென்று ஒரு மரியாதை உருவாகும்.

சராசரி மனிதராக ஸúஹைர் நானாவுக்குப் பல உளவியல் தேவைகள் இருந்தன. தானே பாடசாலைக்குப் போய், உரியவர்களிடம் கதைத்து, பயோ வகுப்பில் ஏலெவலுக்காக ருக்ஷானை ஸுஹைர் நானா சேர்த்து விட்டார்.
ஒரு கிழமை கூட கழிந்திருக்காது. ருக்ஷான் என்ன நினைத்தான் என்று தெரியாது. கொமர்ஸ் கிளாஸில் போய் அமர்ந்து கொண்டான்.

அது கேள்விப்பட்ட போது, ஸுஹைர் நானாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று படைத்தவனுக்கு மட்டும்தான் தெரியும். தண்ணீரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட மீனைப் போல், ஸுஹைர் நானா துடித்தார்.

அவர் கட்டிய கற்பனைக் கோட்டை தரைமட்டமாகி விட்டது. இவ்வளவு காலம் இவன் படித்தது வீண் போய் விட்டது. இனி எந்த முகத்துடன் சொந்தக்காரர்களை முகம் கொடுப்பது? ஏற்கனவே, மகன் டாக்டராகப் போகிறான் என்று ஊருக்குள் பெருமையாகக் கதைத்திருந்தார். அவர்களை எல்லாம் எந்த முகத்துடன் சந்திப்பது...?

ஸுஹைர் நானா ஓய்ந்து போனார். நல்ல வெயிலடித்த ஒரு தினத்தில் மழை மேகங்கள் திடீரென்று தோன்றி, உலகத்தை மழையிருட்டு ஆக்கிரமித்துக்கொள்வது மாதிரி, அவர் வாழ்க்கையில் தோன்றியிருந்த நம்பிக்கை ஒளி, அது தெரிந்த வேகத்தில் காணாமல் போய் விட்டது.

******

''...ம்ம்... ஒழுங்கா சயன்ஸ படிச்சிருந்தா.... இந்த ஒரு கஸ்டமும் இல்ல...''.

அன்று ருக்ஷானுக்கு ஆபிஸில் ஒரு சின்னத் தகராறு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மண்டில் வேலை செய்பவர்களுடன் ஒரு வாய்த்தர்க்கம்.

அந்தக் குழப்பத்துடன்தான் அவன் வீடு வந்திருந்தான். ஒரு நண்பணுடன் அந்த விடயம் பற்றித்தான் செட் செய்து கொண்டிருந்தான்.

பாவம், இது தெரியாமல் ஸúஹைர் நானா வேறு ஏதோ பேசி அவனைக் குழப்பி விட்டார். ஏற்கனவே கோபத்துடன் இருந்தவன் இந்த விடயமும் சேர்ந்து கொள்ள சீரும் புலியாகி விட்டான்.

இதற்கு முன் ஒற்றை வார்த்தையில் கோபத்துடன் பதில் சொல்லி இடத்தைக் காலி செய்யும் ருக்ஷான் இன்று எறிமலையாக கொதித்தெழுந்தான்.

ஆறேழு வருடமாக அடக்கி வைத்திருந்த கோபமும் சொற்களும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. பிக் பாங் மாதிரி. பனிப்போர் மகாபாரத யுத்தமானது.

சமயல் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த தாயார் ஓடி வந்தார். ''...என்னடா இது? வாப்பாக்கு மரியாத இல்லாம பேசுற. வாய அடக்குடா...'' வீட்டின் கட்டுக்கோப்புத் தகர்வதைக் கண்ட தாயாரும் விஸ்வரூபம் எடுத்தாள்.

தங்க்ச்சிமார் பயந்து போய், செய்வதறியாது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

வீட்டிற்குள் நடந்த சண்டை, வீட்டுச் சுவர்களைத் தாண்டி, பக்கத்தில் ரமீஸ் ஹாஜியாரின் வீடு வரைக்கும் கேட்டது. இப்போது குற்றவாளி யார்? சுத்தவாளி யார்? ஸுஹைர் நானாவா? அவருடைய மனைவியா? ருக்ஷானா? அல்லது சம்பந்தமில்லாத வெளியேயுள்ள சமூகமா?

(யாவும் கற்பனை)

ரிஸா ஜவ்பர்
அக்குறணை - கண்டி,
இலங்கை.

(தூரிகை சஞ்சிகை,
மே - ஜூன், 2017, மின்இதழ்)