Saturday, 24 June 2017

குறுக்குத்தெரு ஹோட்டல் : அதிகாலைக் கொள்ளை (சிறுகதை)

அதிகாலை நான்கு மணி..!

அலாரம் அலரியது. உயர்ந்தபட்ச அசௌகர்யத்துடன் கண்களை திறக்க முயற்சிக்கிறான். இரவில் காலதாமதத்துடன் படுக்கைக்கு சென்று, அதிகாலையில் நேரகாலத்துடன் கண் விழிப்பதில் உள்ள அசௌகர்யம் அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

போதாததற்கு சில நாட்களாகவே மனசு வேறு சரியில்லை. ஏ லெவல் ரிஸல்ட் வந்ததில் இருந்து, சற்றுப் பிடிப்பற்றுப் போன மனநிலை. முஆத் சுமாராகப் படிப்பவன்.

'இருப்பத்து நான்கு மணி நேரப் படிப்பு' வகையறாவை சேர்ந்தவன் அல்லன். அதற்காக படிப்பையே வெறுத்தொதுக்கி ஊர் சுற்றபவனுமல்லன்.

த்ரீ ஏ எல்லாம் எதிர்பார்ப்பது அவன் படித்தற்கு சற்று கூடுதல் ஆடம்பரம் என்பது முஆதிற்குத் தெரியும். குறைந்தது மூன்று சீயாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால், கடைசியில் வந்து சேர்ந்தது மூன்று எஸ்.
    
பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஒருவனை இடித்துறைப்பது அந்தளவு தூரம் மனதைப் பாதிப்பதில்லை. எங்கள் வெற்றியிலும் தோல்வியிலும் அவர்கள் பங்கெடுக்கிறார்கள். எம்மோடு சேர்ந்து அவர்கள் சிரிக்கிறார்கள். அழுகிறார்கள். அந்த உரிமையில், அவர்கள் தோல்வியை சுட்டிக் காட்டும் போதும், இடித்துரைக்கும் போதும் அந்த நொடியில் மனம் வலித்தாலும், அது விரைவில் ஆறி விடுகிறது.

ஆனால், சம்பந்தமே இல்லாத யாரோ எல்லாம் இடித்துரைக்கும் போது, உருவாகின்ற உணர்வு கவலையல்ல, கோபம். அந்தக் கோப உணர்வுடன்தான் முஆத் நேற்றிரவு தூங்கச் சென்றிருந்தான். அந்த எரிச்சல் தூக்கத்திலும் எரிச்சலான கனவுகளாக வெளிப்பட்டன. ஊரே கூடி நின்று முஆதை ஏசுவது போலவும், அவன் அதற்குப் பதில் சொல்ல முயல்வது போலவும், ஆனால், அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவராதது போலவும் அசௌகர்யமான கனவுகள். பல்துலக்கி, காலைக் கடன்களை முடித்து, குளித்துத் தயாரானான்.

நேரம் அதிகாலை ஐந்து மணி. பஜ்ருக்கு அதான் சொல்ல இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஐந்து பதினைந்திற்கு கண்டி பஸ்ஸை எடுத்தால், அடுத்த இருபது நிமிடத்தில் கண்டியில்...! கொழும்பை நோக்கிப் போகும் கடுகதி ரயிலில் ஏறிக் கொண்டால், ஒன்பது மணிக்கெல்லாம் கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்திற்குப் போய் விடலாம்...!

கொழும்பில் தொழிசார் பாடநெறிகள் பற்றி விசாரிக்க வேண்டும். அதற்குரிய செலவுகளை ஈடுசெய்வதற்குத் தொழில் ஒன்றையும் தேடிக்கொள்ள வேண்டும்.

தோல்விகள்தான் உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய பலருக்கு ஏணிப் படிகளாகத் திகழ்ந்திருக்கின்றன. வெற்றி பெற வேண்டும் என்ற ஆசைத் தீயை தோல்விகள்தான் மூட்டி விடுகின்றன. அந்த வேணவா இப்போது முஆதின் மனதில் மரமாக முளைத்திருந்தது. இந்த வேணவாவுடனும் திட்டங்களுடனும்தான் முஆத் வீட்டை விட்டு வெளியேறினான்.

சுபஹ் அதானுக்கு சில நிமிடங்கள் இருந்தன. அந்தப் பாதை பிரதான பாதையை ஊடறுத்துச் செல்கின்ற ஒரு குறுக்குப் பாதை. முஸ்லிம் கிராமங்கள் பலவற்றை மட்டுமன்றி, பெரிய சிங்களக் கிராமங்கள் பலவற்றையும் கூட, பிரதான வீதியுடன் இணைக்கின்ற பாதை. வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல ரஜ மகா விகாரையொன்றும் கூட அந்த வீதியில் அமைந்திருந்தது.

அந்த வகையில், குறுக்குப் பாதையாக இருந்தாலும், அந்தப் பாதையின் இரு மருங்கிலும் கடைகள் குவிந்து, வியாபாரம் செழித்திருந்ததில் வியப்பில்லை. ஆனால், இந்த அதிகாலையில் பாதை வெறிச்சோடியிருந்தது. ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது மாதிரி.

தெருநாய்கள் மட்டுமே, வீதிக்கு முழு உரிமை கோரி ஆங்காங்கே அட்டகாசம் செய்து வந்தன. அபூர்வமாக அவ்வப்போது வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. ஒரு ஷொப்பிங்க் மோல் முன்னால், காவல்காரர் கதிரையில் அமர்ந்து தூக்கத்தில் இருந்தார். எண்பதுகளில் வெளிவந்திருந்த பாடல் அந்தப் பழைய ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மயான அமைதியில் அந்த சிறிய ஓசை சுமாரான தூரம் வரைக்கும் கேட்டது.

முஆத் வளர்ந்து விபரம் அறியும் பருவம் அடையும் போது, நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று விட்டது. ஊரடங்கு சட்டத்தை நேரடியாக அவன் அனுபவித்ததில்லை. மடவளையில் பத்துப் பேர் தேர்தல் காலத்தில் கொல்லப்பட்ட போது பிரப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கூட, வளர்ந்த பிறகு பெரியவர்கள் சொல்லித்தான் அவனுக்குத் தெரியம். (இந்தக் கதை நடந்த அடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று முஆதிற்கும் தெரியாது. கதாசிரியருக்கும் தெரியாது).

இந்த அதிகாலை அமைதியைப் பார்த்து ஊரடங்கு சட்டம் இப்படித்தான் இருக்குமோ என்று அப்போது நினைத்துக் கொண்டான். பாதையில் தொடர்ந்து நடந்து வந்து ஒரு கடையை அண்மித்தான். அவ்விடத்தில் இருவர் ஒரு கடையை திறந்து கொண்டிருந்தார்கள். பெயர்ப் பலகையைப் பார்த்தான். ஒரு ஹோட்டல்.

அவர்களுடைய ஆடை, பேசிக் கொண்ட விதம் என்பவற்றில் இருந்து அவர்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்லர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

அவன் அறிந்த வரை அந்தத் தெருவில் வெளியார் வியாபாரம் செய்வது மிகக் குறைவு. அப்படி இருக்க இவர்கள் யார்? சந்தேகமில்லை. கொள்ளையடிக்கப் போகிறார்கள். இந்த ஹோட்டலின் பெயருக்கும் ஆட்களுக்கும் சம்பந்தம் இல்லை. நிச்சயமாக கொள்ளையடிக்க வந்தவர்களே...!

ஆனால், களவு செய்ய வருபவர்கள் அதிகாலை விடிந்து, சுபஹ் நேரத்திலா வருவார்கள்? அதுவும் கூரையைப் பிரித்துக் கொண்டு இறங்காமல், சாவி போட்டுக் கதவைத் திறக்கிறார்கள்? ஒரு இலேசான சந்தேகம் உதித்தது. முஆத் அதையெல்லா அலட்டிக் கொள்ளவில்லை.

எந்த நேரத்தில் வந்தால் என்ன? கடைக்குள் எப்படி நுழைந்தால் என்ன? களவு களவுதான். கொள்ளை கொள்ளைதான். இந்த நேரத்தில் இதனைப் பார்க்கவோ, கவனிக்கவோ ஒருத்தருமில்லை.

இப்போது கட்டிளமைப்பருவ இளைஞன் முஆத் ரோட்டில் நிற்கிறான். இந்த திருட்டைக் கையும், களவுமாகப் பிடிப்பதற்கு வந்திருக்கிறான்.

இப்போது இந்த ஹோட்டலைப் பாதுகாக்க வேண்டும். இல்லா விட்டால், ஒரு குடும்பமே விடிந்து காலையாகும் போது நடுத்தெருவுக்கு வந்து விடும். அது முன்பே தெரிந்திருந்தும் வாழாவிருந்த முஆதும் அதில் பங்காளியாகி விடுவான்.

உண்மையைச் சொன்னால், முஆதிற்குப் பலர் மீது இருந்த கோபம் இப்போது பீறிட்டுப் பாய்ந்து, அதிகாலை நேரத் 'திருடர்கள்' மீது திரும்பியது. சந்தேகமில்லாமல் அவர்கள் திருடர்கள் என முடிவு செய்து கொண்டான் முஆத்.

திருடர்களைக் கடந்து, அவன் பிரதான வீதிக்கு வந்து விட்டான். அதான் ஒலித்துக் கொண்டிருந்தது. 5.15 இற்கு கண்டி பஸ் வந்து விடும். அது தவறினால், சில நேரம் புகையிரதம் தவறி விடும். திருடர்கள் புகுந்த ஹோட்டலைத் திரும்பிப் பார்த்தான். பாதையில் அவர்கள் இல்லை. உள்ளே புகுந்து விட்டார்கள். அட சண்டாளர்களா...? அதற்குள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டீர்களா....?

தொலைபேசியில் நண்பர்கள் மூவருக்குச் சுழற்றினான். ''நீங்கள் அழைத்த இலக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது சேவைக்குட்பட்ட பிரதேசத்தில் அது இல்லை''.

கடைசியில், நான்காவது நண்பன் பதிலளித்தான். ''யே டா... நடு ஜாமத்துல...'' தூக்கம் கலந்த, கரகரத்த குரல் ஒலித்தது.

''மச்சான் இங்கினக்கி கள்ளன்கள்டா!'' இடத்தை சொன்னான்.

''நில்லு மச்சான். ஒடனே வாரேன்..'' பதட்டத்துடன் அடுத்த முனையில் இருந்து குரல் கேட்டது.

பிரதான வீதி குறுக்குத் தெருவைப் போல் ஜனசூன்யமாக இல்லை. தூர இடங்களுக்குச் செல்பவர்கள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர்.

ஆங்காங்கே ஒன்றிரண்டு குடும்பங்களும் நின்றிருந்தன. கண்டி அல்லது பேராதனை வைத்திய சாலையில் நோயாளி பார்க்கச் செல்பவர்களாக இருக்கலாம். ஒரு தொங்கலில் ஹோட்டலொன்றும் திறந்திருந்தது. அதற்கு முன்னால் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அநேகமாக ட்ரிப் போய்க் கொண்டிருக்கும் பஸ்ஸாக இருக்க வேண்டும்.

நண்பன் ஓடி வந்தான். முஆத் சொன்ன செய்தியைக் கேட்டு அவனும் டென்ஷனாகி விட்டான். தவறுகளைத் தட்டிக் கேட்பதில் கட்டிளமைப் பருவ இளைஞர்களுக்கு இருக்கின்ற உறுதி வேறு எவருக்கும் இருப்பதில்லை என்பது எத்தனை பெரிய உண்மை?

என்ன செய்வது என்று யோசித்தார்கள். பொடியான்மார் பலர் ஒன்று சேரும் போது உருவாகும் தைரியம், அவர்கள் தனித்து விடப்படும் போது, பல நேரங்களில் இல்லாமல் போய் விடுகின்றது. இப்போது இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். இரண்டு பேர் மட்டும் போவதற்கு இருவருக்குமே தைரியம் வரவில்லை.

மேலும் சிலரை சேர்த்துக் கொள்வதுதான் நல்லது. பஸாரை அண்டிய பகுதியில் வீடுகள் இருக்கின்ற நண்பர்கள் எவருடைய தொலைபேசியும் வேலை செய்யவில்லை. சிறிது நேரம் சிந்தித்த பிறகு, பிரதான வீதித் தொங்கலில் திறந்த நைட் ஹோட்டலில் உள்ளவர்களையும் சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்கிறார்கள்.

ஹோட்டலை நோக்கி இருவரும் வேகமாக ஓடுகின்றனர். ஹோட்டல் ட்ரிப் போகும் குரூப்பில் உள்ளவர்களுக்கு தேநீர், ஷோர்ட் ஈட்ஸ் என்பவற்றை சப்லை செய்வதில் பிஸியாக இருந்தது.

முஆதும் நண்பரும் கடை முதலாளியிடம் விடயத்தை சொன்னார்கள். அதனைக் காதில் போட்டுக் கொள்ளவே அவர் பெரிதாக விரும்பவில்லை. காலையோடு, கடை நல்ல கலகலப்பாக இருக்கும் நேரத்தில் இந்தக் 'கள்ளன்' பிரச்சி னையா? ''கடைல ஆக்கள், பாருங்களே, தம்பி...!''

முஆதிற்கு உச்சந்தலை வரைக்கும் கோபம் வந்தது. அங்கே ஒரு கடை கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே எந்தப் பொறுப்பும் இல்லாமல் பதில் சொல்கிறார்களே...!

இந்தளவுக்கு மனிதாபிமானம் செத்துப் போய் விட்டதே ...! என்ன வந்தாலும் பரவாயில்லை. தாங்கள் இருவருமே எல்லாவற்றையும் சமாளிப்பது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மீண்டும் குறுக்குச் சந்தில் கொள்ளையிடப்படும் ஹோட்டலை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினார்கள்.

அதற்குள் சுபஹ் தொழுகை தொழுவிக்கப்படுவதற்கும் நேரம் சரியாக இருக்கும் போல் இருந்தது. மற்றொரு குறுக்குச் சந்தின் ஊடாக தொப்பியணிந்து கொண்டு, பள்ளிவாசலுக்கு செல்லும் மனிதர் பிரதான பாதைக்கு வந்து விட்டார். முஆதையும் அவன் நண்பரையும் கவனித்தார்.

அவர்களின் அவசரத்திற்கான காரணத்தை விசாரித்தார். மனிதாபிமானம் செத்துப் போன உலகத்தில், அவரிடம் விடயத்தை நீண்ட நேரம் விளக்கி, நேரத்தை மேலும் போக்க விரும்பவில்லை.
இரண்டொரு வார்த்தைகளில் குறுக்குப் பாதை ஹோட்டல் கொள்ளையிடப்படுவதையும், பிரதான வீதி ஹோட்டல்காரர் அதனைக் கண்டு கொள்ளாததையும் சொல்லி விட்டு, மேலும் வேகமாக நடக்கத் துவங்கினார்கள்.

ஆனால், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை போலிருந்தது. தொப்பியணிந்த மனிதரும் அவர்களுடன் கூட நடந்தார்.


மனசாட்சி உறுத்தியதோ என்னவோ, பிரதான வீதி ஹோட்டல்காரரும், அவருடைய ஹோட்டல் சிப்பந்தி ஒருவரும் கையில் தடியுடன் வந்து கொண்டிருந்தார்கள்.


எல்லோரும் குறுக்குத்தெரு ஹோட்டல் வரைக்கும் வந்து விட்டார்கள்.

குறுக்குத்தெரு ஹோட்டல் விளக்குகள் இப்போது ஜெகஜோதியாக எறிந்து கொண்டிருந்தன. ஹோட்டல் முதலாளி கல்லாப் பெட்டியில் எதுவும் நடக்காதது போல் அமர்ந்திருந்தார்.


ஹோட்டல் வியாபாரத்திற்குத் தயாராக திறக்கப்பட்டிருந்தது.

அன்றைய வியாபரத்திற்குத் தேவையான உணவு பண்டங்கள்
தயாராகிக் கொண்டிருந்தன. அந்த அதிகாலையில் வெறும் வயிற்றோடு இருப்பவர்களின் பசியைத் தூண்டுவதாக இருந்தது ஹோட்டலில் இருந்து வீசிய வாசனை.

இப்போது கூட, கொள்ளைக்காரர்கள் கடை உள்ளேதான் இருந்தார்கள். கடை கொள்ளையிடப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் மிக சகஜமான தோற்றத்தில் இருந்தது.

நடப்பது என்ன என்று யாருக்கும் புரியவில்லை. முதலில் புரிந்தது முஆதிற்குத்தான்.

உண்மை புரிந்த போது வெட்கமும், சங்கோஜமும் அவனைப் பிடுங்கிக் தின்றன.

"அவங்க கடைல வேல செய்றவங்க... நான்தான் தவறுதலா நெனச்சிட்டேன்...''

அனைவருக்கும் விடயம் புரிகிறது. இப்போது மௌனம் கலைகிறது.

''என்ன தம்பி காலையோட.. கொஞ்சம் யோசின இல்லயா? இவ்வளோ பதறிக் கொண்டு ஓடி வந்தீகிற...'' பிரதான வீதி ஹோட்டல் முதலாளி உச்சஸ்தொணியில் பேசினார். அத்தோடு சில தணிக்கை செய்யப்பட்ட வார்த்தைகள்.

மிகைப்படுத்தப்பட்ட கடுகடுப்போடு அவரும் சிப்பந்தியும் திரும்பிப் போனார்கள்.

கடை முதலாளி விடயம் விளங்கிச் சிரித்தார். அந்த சிரிப்பில், தன் நலன் பற்றி முஆத் எடுத்துக் கொண்ட அக்கறை பற்றிய சந்தோஷத்தை விடவும், அசட்டுத்தனமான காரியம் செய்தது பற்றிய ஹாஸ்யம்தான் மிகைத்திருந்தது.


நண்பனுக்கும் அசடு வழிந்தது. ''யோசிக்கர்லயா மச்சான்?'' சினத்துடன் சொன்னவன் வேகமாக நடந்து போய் விட்டான்.

முஆதும், தொப்பி போட்ட மனிதரும் பிரதான வீதி வரைக்கும் வந்தார்கள். முஆதைப் பற்றி விசாரித்தார். கொழும்பு செல்லும் விடயத்தை முஆத் தட்டுத் தடுமாறிச் சொன்னான். நேரம் இப்போது ஐந்து நாற்பத்தைந்து. எக்ஸ்பிரஸ் புகையிரதத்தைப் பிடிப்பது கஷ்டம். எப்படியும் பத்தறை, பதினொரு மணி ஆகிவிடும் கொழும்புக்குப் போய்ச் சேரும் போது.

''மகன், நீங்க செஞ்சது ஒரு நல்ல வேல. அதுக்கு ஒன்டும் வெக்கப்படத் தேவல்ல. ஒங்கட நலவுக்காக செய்யல்லயே..! ஒங்கட சுய நலத்துக்கு செய்றன்டா, எது நடந்தாலும் பரவாயில்ல என்டு கொழும்புக்குப் போய் இருப்பீங்க. இதுக்கு கவலப்பட தேவல்ல...'' முஆதின் மனநிலை அறிந்து தொப்பி போட்ட மனிதர் தட்டிக் கொடுத்தார்.

சற்று தளர்ந்து போயிருந்த முஆதின் மனதுக்கு தொப்பி போட்ட மனிதரின் வார்த்தைகள் இதமளித்தன.

கொழும்புக்கு அடுத்த நாளைக்கே போய்க் கொள்ளலாம் என்று பள்ளிவாசலை நோக்கி நடந்தான்.

நடந்து விட்ட சிறு சம்பவத்திற்காக இன்னும் அவனுள் சங்கோஜம் மறைந்திருந்தாலும், அவன் மனம் நிறைந்திருந்தது. ஏலெவல் ரிஸல்ட் வந்ததில் இருந்து, அவன் இழந்து விட்டிருந்த மன அமைதி இப்போது மீண்டும் திரும்பக் கிடைத்தது போலிருந்தது.

(யாவும் கற்பனை)

ரிஸா ஜவ்பர்,
அக்குறணை - கண்டி, 
இலங்கை

(தூரிகை சஞ்சிகை, ஏப்ரல் 2017 இதழ்)