அது டிசம்பர் மாதம்.
குளிர் காற்று சில்லென்று வீசியது.
கண்டியின் மார்கழி மாதக் குளிர் காற்றும், ஏழு மணி இளம் வெயிலும் உடலுக்கு இதமாக இருந்தது.
பக்கம் பக்கமாய் கவிதை எழுதலாம் வாருங்கள் என்பது போல், கீச்சிட்டப்படியே பல வகைப் பறவைகளும் பறந்து திரிந்து கொண்டிருந்தன.
ஹிஷாமாவின் வீட்டு முற்றம்.
பூவிதழ்களும், பூக்கன்றுகளின் இலைகளும் காலை நேரப் பனித் துளியில் இன்னும் நனைந்திருந்தன.
மூச்சுக் காற்றுடன் சேர்ந்து நீராவியும் வாய் வழியில் புகையாக வெளியானது.
முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி எடுத்தாள் ஹிஷாமா.
முற்றம் கூட்டுவது எவ்வளவு நல்ல உடற்பயிற்சி என்று அனுபவத்தில் கண்டிருக்கிறாள்.
அரை மணி நேரம் முற்றம் கூட்டுவது உடலுக்கும், உள்ளத்துக்கும் புதுத் தெம்பைத் தருவதை அவள் அவதானித்திருக்கிறாள்.
ஏலெவல் முடித்த நாளில் இருந்து, திருமணம் முடித்த பிறகும் கூட, காலை 7.30க்கு முன்பு ஹிஷாமா நிறைவு செய்கின்ற பணிகளில் இதுவும் ஒன்று.
அவளுடைய நாள் காலை 5.30 க்கு ஆரம்பிக்கும்.
சுபஹ் தொழுகையை தொழுது விட்டு, குர்ஆன் ஓதி, மிஹ்ராபில் இருந்து 6.15 வரை எழுந்திருக்க மாட்டாள்.
பிறகு மாமியாருடன் சேர்ந்து, அன்றைய காலைச் சமையலுக்குரிய தயாரிப்பில் ஈடுபடுவாள்.
அதன் பிறகுதான் முற்றம் கூட்டுவது...
முற்றம் கூட்டி முடிந்ததும் பாத்ரூமில் சென்று குளிப்பாள் அல்லது உடலை நனைத்து வொஷ் ஒன்று எடுத்துக் கொள்வாள்.
இதற்கு மத்தியில் மகன் எழும்பினால்தான் உண்டு.
இப்போது அவனுக்கு மூன்று வயதாகிறது.
இன்னும் ஓரிரு வருடத்தில் அவன் ஸ்கூல் போக வேண்டும்.
குளித்து முடிந்து வந்து பார்த்த போது, கணவன் உஸ்மான் அன்றைய பத்திரிகையில் ஆழ்ந்திருந்தான்.
அவள் வந்து அருகில் அமர்ந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை.
"என்ன, சிரியாவுல யுத்தம் முடிவுக்கு வருமா?", சிரியா யுத்தம் பற்றிய அரசியல் பகுப்பாய்வுக் கட்டுரையை அவன் வாசிப்பதை பார்த்துத்தான் அவள் கேட்டாள்.
சிறிது நேரம் அந்தக் கட்டுரையை வாசித்து முடித்தவன் கேட்டான்.
"என்ன கேட்டிங்க?" "
"இல்லை, சிரியால யுத்தம் முடியுமா? என்டு கேட்டேன்".
அவனது முகத்தில் அகன்றதொரு புன்னகை படர்ந்தது.
திருமணத்திற்கு முன்பு என்றால், பெண்களின் அறிவைப் பற்றி அந்தளவு அவனுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.
ஆண்கள் ஓலெவலுடன் பிஸ்னஸிற்குப் போகிறார்கள்
அல்லது வேறு தொழில்களுக்குப் போகிறார்கள். பெண்களுக்கு வேலையில்லை என்பதால், திருமணம் பேசப்படும் வரை படிக்கிறார்கள்.
கல்யாண சந்தையில் தன்னை மார்கட் பண்ணுவதற்கு அவளுக்கு அது தேவைப்படுகிறது..!
இதுதான் அவனுக்கு பெண் பிள்ளைகளைப் பற்றி இருந்த பார்வை.
இப்படித்தான் இளைஞர்களில் பலரும் உண்மையில் நினைக்கிறார்கள்.
தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக தன்னை விடப் படித்தவளாக இருக்கக் கூடாது என்று உம்மாவிடம் உஸ்மான் நிபந்தனை விதித்திருந்தான்.
நாம் என்னதான் நினைத்தாலும், இறைவனின் திட்டம் என்று ஒன்று இருக்கிறதே...!
ஓலெவல் வரை படித்திருந்த அவனுக்கு, ஏலெவல் வரை படித்திருந்த ஹிஷாமாதான் மனைவியானாள்.
அது அவனுக்குள் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான், திருமணத்தின் பிறகு அதற்கு மேல் படிக்க அவள் விரும்பிய போதும், அவன் அனுமதிக்கவில்லை.
"சிரியால யுத்தம் முடியுமா?"" என்ற கேள்விக்கும், அதற்கு உஸ்மான் பதில் சொல்வதற்கும் இடைப்பட்ட அந்த சில நொடிகளில் இந்த எல்லா சிந்தனைகளும் அவன் உள்ளத்தில் தோன்றி மறைந்தன.
தன் மனைவியுடன் உலக நடப்புகளை எல்லாம் பேசும் நாள் வரும் என்று அவன் ஒரு போதும் நினைத்ததில்லை.
பெண்கள் அடுப்பு ஊதுவதும், ஆண்கள் வியாபாரம் செய்வதும் என்பதான கட்டமைப்புக்கு வெளியில் வாழ்க்கையின் இனிமையான பக்கங்களை அவன் கற்பனை செய்ததில்லை.
உண்மையைச் சொன்னால், திருமணம் என்கிற போது, படுக்கையறை மட்டுமே அவன் புலக்காட்சியில் இருந்திருக்கிறது.
"சிரியா யுத்தம்.. ம்ம்ம்.. அல்லாஹ்தான் சிரியாவுக்கு உதவி செய்யணும்.." என்று சொன்னவன் மீண்டும் சிந்தனையில் மூழ்கினான்.
"என்ன யோசிக்கிறிங்க வா... மனசுக்கு எதாவது கஷ்டமா?"
மனைவியின் கேள்வியால் தன்னுணர்வு பெற்றவன்,
"இல்ல.. இல்ல... மனசுக்கு கஷ்டம் ஒன்டும் இல்ல... கொஞ்சம் ப்ளாஷ்பெக்ல போய்டேன்"
"ம்ம்ம்.. ப்ளாஷ்பெக் மனசுக்கு கஷ்டமா இருந்தது என்டா, என்கிட்ட சொன்னா கொஞ்சம் பாரம் கொறையும் தானே".
சில வினாடிகள் கழித்து ஹிஷாமா தொடர்ந்தாள். "ஒங்களுக்கு விருப்பம் என்டா சொல்லுங்க".
இருவரும் தம் அறைக்குள் சென்றார்கள்.
உஸ்மானுக்கு ஆரம்பத்தில் ஓரளவு தாழ்வு மனப்பான்மை இருந்தது. அவள் தன்னை விடப் படித்திருந்ததால், அகங்காரமாக நடந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தான்.
அதனால்தான், அவள் மேற்கொண்டு படிப்பதற்கும் அனுமதி தர கண்டிப்பாக மறுத்து விட்டான்.
ஆனால், அவளை சரிவரப் புரிந்து கொள்ள அவனுக்கு நீண்ட காலம் எடுத்தது.
தன் சகோதரிகள் இருவரும் திருமணம் செய்து சென்ற பிறகு, வெறிச்சோடி கிடந்த வீடு, இவள் வந்த பிறகு தான் மீண்டும் கலகலப்பானது.
அவள் அவனுக்காக செய்திருந்த தியாகங்கள் பல அவனது இதயத்தில் அவளுடைய இடத்தை மேலும் ஸ்திரமாக்கி விட்டிருந்தன.
பெண் என்ற வகையில் அவள் சில போது அழுவதும், கண்ணீர் வடிப்பதும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது உண்மைதான்.
ஆனால், அவள் இல்லாத வாழ்வொன்றை இப்போது அவனால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது.
பிரம்மச்சாரியாக வாழ்ந்த காலம் என்பது வாழ்க்கையின் நிறமற்ற கருப்பு- வெள்ளை வாழ்கையாக இப்போது அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.
அவளை மேற்கொண்டு படிக்க விடவில்லை என்பது இன்று வரை அவனுடைய மனதில் குற்ற உணர்ச்சியாக இருந்து, அவனை சித்திரவதை செய்து வந்திருக்கிறது...
இந்த விடயங்களை எல்லாம் வெளிப்படுத்தவே அவன் விரும்பினான். ஆனால், அது அத்துனை இலகுவாக இல்லை.
ஆணாகப் பிறந்தவனுக்குப் பெண்ணைப் போல் மனோ உணர்வுகளைப் பட்டென்று வெளிப்படுத்தும் தன்மை இருப்பதில்லை என்பது ஒரு பெரிய உண்மை.
பெண்ணின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் இருந்தால்தான் அந்த உணர்வுகள் வெளிப்படும். அது ஹிஷாமாவிற்கும் தெரியும்.
"சொல்லுங்க வா... என்னவா? ஏன்ட சொல்லாட்டி, வேற யார்கிட்ட சொல்றது...?.... என்ன விஷயம் என்டாலும் சரி. கொஞ்ச நாளாவே ஒங்களுக்கு என்னவோ கஷ்டமா இருக்குறது எனக்குத் தெரியும். ஒங்கட மொகத்துல ஒரு சின்ன மாற்றம் வந்தாலும் எனக்கு வௌங்கும். ப்ளீஸ் சொல்லுங்களே" என்று அவள் உட்சாகப்படுத்தினாள்.
ஒரு முறை கனைத்துக் கொண்டான். சிந்தனை ரேகைகள் அவனில் படர்ந்தன.
"...."
"சொல்லுங்கவா...".
நீண்ட காலம் அவன் மனதை குடைந்து கொண்டிருந்த வேதனை வெளிப்படுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தது.
உஸ்மானின் மனதில் ஒரு பெரும் பாரம் இருந்து அவனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஹிஷாமா கண்டு கொண்டாள்.
அதனை அவன் சொன்னால்தான் அவன் மனம் அமைதி அடையும் என்பதையும் அவள் உணர்ந்தாள்.
ஆனால், அவனை எப்படி சொல்ல வைப்பது? அவன் மனதை திறக்க வைப்பது இலேசுமாசானதாக இல்லை.
மனதைக் குடைந்து கொண்டிருக்கும் பிரச்சினையை உரிய முறையில் வெளிப்படுத்தி, மனதை இலகுபடுத்திக் கொள்ளவில்லை என்றால் பிறகு என்ன நடக்கும்?
எரிச்சல் வரும், கோபம் வரும். சண்டைகள் வரும். ஆனால், இன்று உஸ்மானின் மனதைத் திறக்கின்ற முயற்சியில் ஹிஷாமா தோற்றுத்தான் போனாள்.
உஸ்மானைப் பொறுத்த வரை, அவன் தன் மன உணர்வுகளை ஹிஷாமாவிடம் சொல்ல விடவே நினைத்தான். ஆனால், ஏதோ ஒன்று அவனைத் தடை செய்தது.
நாவுக்கு முடிச்சுப் போட்ட மாதிரி.
எங்கிருந்து ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று அவனுக்கு விளங்கவில்லை.
"இல்ல ஹிஷாமா, கொஞ்சம் தல வலி, அவ்ளோதான்" என்றான் உஸ்மான்.
அதனை ஹிஷாம் நம்புவாளா என்று கூட உஸ்மானுக்கு விளங்கவில்லை.
"அப்ப சும்மாதானே பேபர் வாசித்துக் கொண்டீந்தீங்க. ப்ளேஷ்பக் என்டெல்லாம் சொன்னீங்க".
"இல்ல, உண்மைலயே தல வலிக்குது" உஸ்மானின் குரலில் கோபம் தொணித்தது. "ப்ளீஸ், கொஞ்சம் என்ன டிஸ்டர்ப் பண்ண வாணம்...", சொன்னவன் கட்டிலில் சாய்ந்தான்.
ஹிஷாமாவின் கண்களில் ஈரம் துளிர்த்தது. அவனைக் காலையோடே கோபப்படுத்தி விட்டேன் என்ற குற்ற உணர்வோடு அறையை விட்டு வெளியேறினாள்.
தொண்டை வரை வந்ததை மனம் திறந்து சொல்லி இருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?
உண்மையில் ஹிஷாமைவை விட பச்சாதாபப்பட்டது உஸ்மான்தான்.
(யாவும் கற்பனை)
ரிஸா ஜவ்பர்
அக்குறணை - கண்டி
இலங்கை
(2017, ஏப்ரல் மாதம் தூரிகை இரண்டாவது இதழில் பிரசுரமானது).